வவுனியா தொழில்நுட்பக்கல்லூரிக்கு விடுதி வசதி அமையுமாக இருந்தால் அதிகளாவன மாணவர்கள் கற்கும் வசதி ஏற்படும் என வவுனியா தொழில்நுட்பக்கல்லூரியின் அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக்கல்லூரியில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக கேள்வி எழுப்பும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த வருடம் 645 மாணவர்கள் எமது தொழில்நுட்பக்கல்லூரியில் பதிவினை மேற்கொண்டிருந்தனர். இவர்களில் 500 மாணவர்களே பரீட்சையில் தோற்றவுள்ளனர். 145 மாணவர்கள் இடை விலகிவிட்டனர். இடை விலகியவர்கள் தூர இடங்களில் இருந்து வருவதனால் போக்குவரத்து பிரச்சனைகளை எதிர்கொள்வதுடன் தங்குமிடங்களுக்கும் அதிகளவான நிதியை செலவிடவேண்டியேற்படுகின்றது.
எனவே எமது தொழில்நுட்பக்கல்லூரியில் விடுதி வசதி இருக்குமாயின் அதிகளவான மாணவர்கள் தங்கி நின்று கற்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன் இடை விலகலும் குறைவாக காணப்படும்.
இந் நிலையில் எதிர்வரும் 21 ஆம்திகதி முடிவுத் திகதியிடப்பட்டு 24 பாட நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. இவற்றில் முழு நேர பயிற்சி நெறிகள் இலவசமாக கற்பிக்கப்படும் என்பதுடன் அவர்களுக்கான பயண பருவச்சீட்டுகளும் 1000 ரூபா ஊக்குவிப்பு பணமும் வழங்கப்படவுள்ளது.
எனவே பாடசாலை கல்வியை நிறைவு செய்த 17 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் விண்ணப்பித்து சிறந்த கற்றல் செயற்பாடுகளில் இணைந்து கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது