இராணுவத்தினர் முல்லைத்தீவில் தொடர்ந்தும் பொது மக்களின் காணிகளை சூறையாடி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
பொது மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட அபிவிருத்திக்குழு தீர்மான முடிவுகள் நிறைவேற்றப்படுகின்றதா என்று முல்லைத்தீவு ஊடக அணிஎழுப்பிய கோள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு வட்டுவாகல் (வெட்டுவாய்க்கால்) பிரதேசம் எமது மக்களுக்கான சுற்றுலா பிரதேசமாகவும் கடற்றொழில் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பிரதேசமாக அபிவிருத்திக்குழு கூட்டத்தில் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இராணுவம் இன்று அபிவிருத்திக்குழு தீர்மானத்தையும் மீறி காணி அபகரிப்புக்கான வேலையை முன்னெடுத்துள்ளது.
ஆகவே முல்லைத்தீவு மாவட்டத்தில் நல்லாட்சி அரசின் சிவில் ஆட்சி நடைபெறுகின்றதா அல்லது இராணுவ ஆட்சி நடைபெறுகின்றதா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.