மகிழ்ச்சியாக இருப்பது குற்றமா? விசித்திர வழக்கை சந்தித்த நீதிமன்றம்

சுவிட்சர்லாந்தில் பெண்மணி ஒருவர் உரத்த குரலில் பாடல்கள் பாடியதாக கூறி அவர் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் லாசன்னே நகரில் குறித்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது. கடந்த யூன் மாதம் ஒரு மாலை நேரத்தில் குறித்த பெண்மணி ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு தனக்கு மிகவும் பிடித்தமான ‘I Feel Good’ பாடலை மிகவும் மகிழ்ச்சியுடம் உரத்த குரலில் பாடியபடியே நடந்து சென்றுள்ளார்.

30 வயதான குறித்த கொசோவோ பெண்மணி சுரங்கப்பதை ஒன்றை கடக்க முயன்றபோது 4 பொலிஸ் அதிகாரிகள் வந்து இடைமறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி வழக்கு பதிந்துள்ளனர்.

சாலையில் மின்னல் வேகத்தில் செல்லும் இருசக்கர வாகனங்களால் பொதுமக்களுக்கு ஏதும் இடையூறு ஏற்படவில்லை. ஆனால் நடைபாதை வழியே உரத்த குரலில் பாடுவது பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்த வேடிக்கையான ஒன்று என வழக்கினை வாதிட்ட வழக்குரைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கண்டனத்துக்கு உள்ளாகும் வகையில் செயல்படுவது சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரிகள், வாரந்தோறும் இதுபோன்ற கண்டனங்கள் பொதுமக்களிடம் இருந்து காவல்துறைக்கு வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடியே குறித்த பெண்மணி தண்டனைக்குரிய குற்றம் எதுவும் செய்யவில்லை எனக் கூறி நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

மட்டுமின்றி உரிய ஆவணங்கள் ஏதுமின்றி வசித்துவரும் மக்கள் இதுபோன்ற சிக்கலில் சிக்கி நாடுகடத்தப்படுவார்களோ என்ற அச்சத்தில் வாழ்ந்துவருவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.