ட்ரம்ப் முன்பாக உள்ள பொறுப்புகள்

முழு உலகிலும் கடந்த சில மாதங்களாகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவு வெளியாகி விட்டது.

அதுதான் ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வியாகும். இக்கேள்விக்கு நேற்று பதில் கிடைக்கப் பெற்றுள்ளது.

அந்நாட்டில் ஜனநாயக முறைப்படி நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக இப்பதில் கிடைத்துள்ளது.

120 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்த இத்தேர்தல் மூலம் அடுத்து வரும் நான்கு வருடங்களுக்கு தம்மை ஆள வேண்டிய ஜனாதிபதியை அந்நாட்டு மக்கள் தெரிவு செய்து விட்டனர்.

அவர் டொனால்ட் ட்ரம்ப்.

உலக வல்லரசும், உலகின் பலம் மிக்க ஜனநாயக நாடுமான ஐக்கிய அமெரிக்காவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இத்தேர்தலில் அந்நாட்டின் 45 வது ஜனாதிபதியாக இவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

இவரது தெரிவை அமெரிக்காவின் தேர்தல்கள் கல்லூரி நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து இவரை எதிர்த்து இத்தேர்தலில் களமிறங்கிய கிலாரி கிளின்டன் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அத்தோடு ட்ரம்ப் நாட்டு மக்களுக்கும் உரையாற்றினார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1946ம் ஆண்டில் பிறந்த ட்ரம்ப் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைப் பட்டதாரியாவார்.

தொழில் ரீதியில் அமெரிக்காவின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான ட்ரம்ப், இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து ஐனநாயகக் கட்சி சார்பில் கிலாரி கிளின்டன் களமிறங்கினார்.

இவர் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியும், பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில் வெளிவிவகார செயலாளராக கடமையாற்றியவருமாவார்.

உலகின் பலம் மிக்க நாடான அமெரிக்காவின் இம்முறைத் தேர்தல் களம் ஆரம்பம் முதல் பரபரப்பு மிக்கதாகவும், சர்ச்சைகள் நிறைந்ததாகவுமே காணப்பட்டது.

இவ்வாறான நிலைமை அமெரிக்காவில் அண்மைக் காலத்தில் எற்படவில்லை என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து.

சர்ச்சைக்குரிய பேச்சுகள், பாலியல் புகார் என்பன காரணமாக ட்ரம்ப் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

அதேநேரம் கிலாரி கிளின்டன் ஒபாமா நிர்வாகத்தில் இராஜாங்கச் செயலாளராகக் கடமையாற்றிய போது தமது உத்தியோகபூர்வப் பணிகளுக்கு தனிப்பட்ட மின்னஞ்சலைப் பயன்படுத்தியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேர்தல் பிரசார காலத்தில் ட்ரம்ப் தெரிவித்த சில கருத்துகள் உலகளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதனால் அவர் பெரும் சர்ச்சைக்குரிய நபராகவும் பார்க்கப்பட்டார்.

குறிப்பாக ஐ.எஸ். ஐ. எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்பில் இவர் முன்வைத்த கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதேநேரம், ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் தோற்றம் தொடர்பில் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை தோற்றுவித்தன.

ஏனைய நாடுகளில் பதவிக்கு வருவதற்காக சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டது போன்று ட்ரம்ப்பும் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை முன்னெடுப்பதாகவே பரவலாக நோக்கப்பட்டது.

இப்பேச்சுகள் அவரை ஒரு வெகுளியாக நோக்கும் நிலைமையையும் தோற்றுவித்தது.

அதேநேரம் ஆரம்பம் முதல் தேர்தல் களம் பெரும் பரபரப்பாக விளங்கிய போதிலும், அந்நாட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட தேர்தல் கருத்துக் கணிப்புகள் கிலாரி கிளின்டன் முன்னணியில் இருப்பதாகவும், அவருக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்றும் தேர்தலுக்கு முன்னரான சில தினங்கள் வரையும் கூறி வந்தன.

அந்தக் கணிப்புகளை தேர்தலை அண்மித்த சில தினங்கள் பொய்ப்படுத்தி நிலைமையைத் தலைகீழாக மாற்றியுள்ளது.

இதற்கு காரணங்கள் இருக்காமல் இராது.

இதற்கு கிலாரி பெண்ணாக இருப்பதும் ஒரு காரணமாகப் பார்க்கப்பட்டிருக்கலாம் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை உலகில் பலம் மிக்க ஒரு வல்லரசு.

அதற்கு ஒரு பெண் தலைமை வழங்க முடியுமா என்ற பார்வை அமெரிக்கர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்க முடியும்.

அதேநேரம் கிலாரி இராஜாங்கச் செயலாளராகப் பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அரசாங்கத்தில் அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடிக்களுக்கு முகம் கொடுத்தது.

பல நிறுவனங்கள் பாரிய பொருளாதார சரிவை எதிர்கொண்டன.

அத்தோடு முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலம் முதல் அந்நாட்டு மக்கள் கிலாரியையும் அவரது கொள்கைகளையும் அறிந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இவ்வாறான காரணங்கள் ட்ரம்ப்பின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு வழிவகுத்திருக்க முடியும்.

ஏனெனில் இவர் அந்நாட்டின் தேசிய அரசியலுக்கு புதியவராவார்.

என்றாலும் அடுத்து வரும் நான்காண்டுகளில் ட்ரம்ப் அமெரிக்காவுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் அளப்பரியன.

அவற்றில் பொருளாதாரத் திட்டங்கள் பிரதானமானவை.

அதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு அந்நாட்டு மக்களினால் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப்பதவிப் பொறுப்பை 2017.01.20ல் இவர் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளவிருக்கின்றார்.

ஆயினும் பதவிக்கு வரும் நோக்கில் தேர்தல் பிரசார காலத்தில் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இவரது வெளிநாட்டுக் கொள்கை அமையுமா என்று உலகம் பார்க்கத் தொடங்கியுள்ளது.

அவ்வாறு அமையுமாயின் அது உலகில் பல்வேறு நெருக்கடிகளையும் தோற்றுவிக்கும்.

ஆனால் உலகில் அமைதி சமாதானம் நிலவ வேண்டும் என்பதே எல்லா மக்களதும் எதிர்பார்ப்பும் வேணவாவாகவுமாக உள்ளது.

அதற்கு பக்கத் துணையாக ட்ரம்ப் இருப்பார் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.