பிரீமியர் பேட்மிண்டன் லீக்: கரோலினா அதிக தொகைக்கு ஏலம்

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் அதிக தொகையாக ரூ.61½ லட்சத்துக்கும், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ரூ. 39 லட்சத்துக்கும் ஏலம் போனார்கள்.

மொத்தம் ரூ.6 கோடி பரிசுத் தொகைக்கான 2-வது பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி (பி.பி.எல்.) இந்தியாவில் அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி ஐதராபாத், பெங்களூரு, மும்பை, சென்னை, டெல்லி, லக்னோ ஆகிய நகரங்களில் நடக்கிறது.

இதில் பங்கேற்கும் 6 அணிகளுக்கான வீரர்கள் ஏலம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 16 பேர் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களின் பெயர் ஏலப் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. ஒவ்வொரு அணியும் தலா 10 வீரர்-வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்கலாம். வீரர்களை வாங்க ஒரு அணி அதிகபட்சமாக ரூ.1.93 கோடியை செலவிடலாம்.

ஏலத்தில் எல்லோரும் எதிர்பார்த்தது போல் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான கரோலினா மரின் (ஸ்பெயின்) அதிக தொகைக்கு ஏலம் போனார். அவரை ஐதராபாத் ஹன்டர்ஸ் அணி ரூ.61½ லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. அவருக்கு அடுத்த படியாக தென் கொரியா வீராங்கனை சுங் ஜி ஹூன் ரூ.60 லட்சத்துக்கு விலை போனார். அவரை மும்பை ராக்கெட்ஸ் அணி வாங்கியது.

டென்மார்க் வீரர் ஜன் ஒ ஜோர்ஜென்சென் ரூ.59 லட்சத்துக்கு ஏலம் போனார். அவரை டெல்லி ஏசர்ஸ் அணி சொந்தமாக்கியது. இந்திய வீரர் ஸ்ரீகாந்தை ரூ.51 லட்சத்துக்கும், இந்திய வீராங்கனை சாய்னா நேவாலை ரூ.33 லட்சத்துக்கும் அவதே (லக்னோ) வாரியர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

முதலில் ஏலம் போகாத சாய்னாவை அடுத்த ரவுண்டில் அவதே வாரியர்ஸ் வாங்கியது. முதலாவது சீசனிலும் சாய்னா இதே அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை, சென்னை ஸ்மாஷர்ஸ் அணி ரூ.39 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

எதிர்பார்ப்புக்கும் குறைவான தொகைக்கு ஏலம் போனது குறித்து சிந்து கருத்து தெரிவிக்கையில், ‘பட்டியலில் எனது பெயர் கடைசியில் இருந்தது. அதனால் விலை குறைந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். எது எப்படியோ மீண்டும் சென்னை அணிக்கு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

இந்தியன் பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி நடைபெறும் சமயத்தில் சீனா லீக் மற்றும் ஜப்பானில் தேசிய பேட்மிண்டன் போட்டிகள் நடைபெறுவதால் அந்த இரு நாடுகளின் முன்னணி வீரர்-வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மலேசிய நம்பர் ஒன் வீரர் லீ சோங் வெய்யும் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை.