வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்! ஆண்டுக்கு ரூ.2,600 கோடி வருவாய் ஈட்டுகிறார்

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் களத்தில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இவர் நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தவர்; அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்ப வானாகவும், ஊடகங்களில் பிரபலமானவராகவும் இருந்தவர் இன்று அமெரிக்காவின் அதிபராகி வெள்ளை மாளிகைக்கு குடியேற உள்ளார்.

ரியல் எஸ்டேட் டு அரசியல்!

டொனால்ட் ஜான் டிரம்ப்… இதுதான் ட்ரம்ப்-ன் முழுப் பெயர். 1946-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிறந்த டிரம்ப்-க்கு இப்போது 69 வயது. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சிப் பிரபலம், டிரம்ப் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000 கோடி.)

டொனால்ட் டிரம்ப், தனது தந்தையின் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வந்தவர். தந்தை எட்டடி பாய்ந்தால், மகன் பதினாரடி பாய்கிற மாதிரி அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மிகப் பெரிதாக வளர்த்தெடுத்தவர். இன்று அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்ப வானாகவும், ஊடகங்களில் பிரபலமானவராகவும் இருந்து வருகிறார் ட்ரம்ப்.

ஹில்லாரி vs டிரம்ப்!

ஜனநாயக கட்சியைப் பொறுத்தவரை, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அந்தக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். குடியரசு கட்சியில் மெகா கோடீஸ்வர தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. மெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட மூன்று அடிப்படை தகுதிகள் அவசியம். அந்த நாட்டின் சட்டபூர்வ குடிமகனாகப் பிறந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் 14 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். இவை அடிப்படை விதியாக இருந்தாலும், அவ்வளவு எளிதாக யாரும் அதிபர் வேட்பாளராக முடியாது.

சர்ச்சை மன்னன்!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பே அதிபராவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள வேட்பாளராக பேசப்பட்டவர் டொனால்ட் டிரம்ப். ஆனால், இவர் அவ்வப் போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களை தேடிக்கொள்வதிலும் நிகரில்லாதவராக விளங்கியவர்.

‘நான் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்றுவேன். ஈரானுடன் அமெரிக்கா செய்துள்ள அணு ஒப்பந்தம் என்னும் பேரழிவை உடனடியாக ரத்து செய்வேன். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட சவுதி ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், நான் அமெரிக்க அதிபரான பிறகு சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவேன்’ என பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கொஞ்சமும் தயங்காமலும் யோசிக்காமலும் தினமும் சொல்லி வந்தவர் ட்ரம்ப்.

இந்தியாவுக்கு எதிராக..!

இதுமட்டும் இல்லாமல் வேலைவாய்ப்பு பற்றிய பிரசாரம் அமெரிக்க மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை தெரிந்துகொண்ட டொனால்ட் டிரம்ப் அது பற்றியும் பேசி மாட்டிக் கொண்டார்.

“இந்தியா, சீனா, ஜப்பான், மெக்சிகோ போன்ற நாடுகள் அமெரிக்கர் களின் வேலை வாய்ப்பை தட்டிப் பறித்துள்ளன. இந்த வேலை வாய்ப்புகளை மீட்டு, அமெரிக்க மக்களுக்கு வழங்குவேன். மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எல்லைச் சுவர் எழுப்புவேன்’’ என சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

காந்தியின் பொன்மொழி!

பல இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் மக்களின் எதிர்ப்பை சந்தித்துவந்த டிரம்ப், யாரோ கூறிய ஒரு வாசகத்தை தனது பிரசாரத்துக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் காந்தியின் பொன்மொழி என்று குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

‘முதலில் உன்னைப் புறக்கணிப்பார்கள். பிறகு உன்னைப் பார்த்து சிரிப்பார்கள். பின்னர் உன்னோடு சண்டையிடு வார்கள். கடைசியாக நீதான் ஜெயிப்பாய்’ என்று காந்தியின் பொன்மொழி என்று தவறாக குறிப்பிட்டு பேசினார். யாரோ சொன்னதை எல்லாம் காந்தி சொன்னதாக டொனால்ட் டிரம்ப் உளறி வருகிறார் என இவரை கிண்டலடித்து, கேலி செய்து விட்டனர் நெட்டிசன்கள்.

சொந்தச் செலவில்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் தேர்தல் செலவுக்காகப் பெரும் தொகையைத் திரட்டி வந்தனர். இதில் தொழிலதிபர்கள் பலரும் பெரும் தொகையை நன்கொடையாக அளித்து வந்தனர். இந்த நிலையில், தமது சொந்தப் பணத்தையே தேர்தலில் செலவு செய்தவர்தான் டொனால்ட் டிரம்ப்.

நன்கொடை அளிப்பவர்கள், பிரதிபலனை எதிர்பார்ப்பார்கள். அதனால் சொந்த செலவிலேயே அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார் டொனால்ட் டிரம்ப். ஆண்டுக்கு ரூ.2,600 கோடி வருவாய் ஈட்டுகிறேன். தேர்தலில் ரூ.6,500 கோடி செலவானாலும் அதற்கு தாம் தயார் என கூறியவர்தான் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க அதிபர்!

இந்த நிலையில் ஹில்லாரி கிளின்டனை விட அதிக வாக்குகளை பெற்று டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகியுள்ளார். ‘இந்தியா தட்டிப் பறித்துள்ள வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு மீண்டும் பெற்றுத் தருவேன்’ என்பது உள்பட அமெரிக்க குடிமகன்களுக்கு சாதகமான பல கருத்துக்களை தெரிவித்த டிரம்ப் ரியல் எஸ்டேட் ஜாம்பவனாக இருந்து, இப்போது அமெரிக்காவின் அதிபராகி வெள்ளை மாளிகையில் குடியேற உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.