சவுதி அரேபியாவில் பாலியல் கொடுமை செய்த நான்கு பேருக்கு 7000 சவுக்கடி மற்றும் 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெத்தா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த நான்கு பேர், உள்ளே இருந்த பெண்ணின் கணவனை மின்சார வயரினால் கட்டிப்போட்டுள்ளனர்.
பின்னர் அந்த வெளிநாட்டு பெண்ணை தாக்கி, அவரது கணவர் மற்றும் மகளின் முன்னால் நிர்வாணமாக்கி நான்கு பேரும் கூட்டாக பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர்.
வீட்டிற்குள் நுழைந்த நால்வரும் முதலில் 10,000 ரியால் பணம் மற்றும் எட்டு மொபைல் ஃபோன்களுடன் தப்பி சென்றுள்ளனர். சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து கத்தி முனையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பிறகு ஜெத்தா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அந்த நால்வரில் ஒருவருக்கு 2500 சவுக்கடிகளும், 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூவரில் இருவருக்கு தலா 1,500 சவுக்கடிகளும், 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நான்காவது நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1,5000 சவுக்கடிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக உள்ள சவுதியில் பாரபட்சமின்றி தண்டனைகள் வழங்கப்படும்.
கடந்த மாதம் ஆட்சியில் உள்ள அல்-சாத் குடும்பத்தை சேர்ந்த இளவரசர் தவறு செய்ததற்காக சவுக்கடியும், பின்னர் மற்றொரு இளவரசருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.







