மூக்கில் ரத்தம் வடிவது ஏன்?

மூக்கானது இரத்தக் குழாய்கள் மிகவும் செறிவாக உள்ள ஒரு உறுப்பாகும். அத்துடன் அது முகத்திலிருந்து வெளியே தள்ளிக் கொண்டிருக்கிறது.

ஆதலால் மிகவும் பாதுகாப்பற்ற நிலையிலும் இருக்கிறது. எனவே எந்த விபத்தின் போதும் முகம் அடிபடும்படி விழுந்தால் அது காயப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

அத்துடன் மூக்கின் மென்சவ்வுகளில் இரத்தக் குழாய்கள் மிகவும் செறிவாக இருப்பதால் சிறிய காயமானாலும் இரத்தப் போக்கு மிக அதிகமாகவே இருக்கும்.

மூக்கை அடிக்கடி நோண்டும் பழக்கமுள்ளவர்களுக்கும் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். இருந்தபோதும் மூக்கால் இரத்தம் வடிவதற்கு அது முக்கிய காரணமல்ல.

பொதுவாக குளிர் காலத்தில் வைரஸ் கிருமிகள் பரவுவதால் மூக்கின் மென்சவ்வுகள் காய்ந்து வரண்டு இருக்கும். இதனால் அவை தாமாகவே வெடித்து குருதி பாய்வதற்கான வாய்ப்பு அதிகமாகும். இவை காரணமாக மூக்கால் இரத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி. வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்

மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. எனவே அதனை மிகவும் பாதுகாப்பாக கவணித்துக் கொள்ளவேண்டும்.

மூக்கில் இரத்தம் வடிந்தால் என்ன செய்ய வேண்டும்?
  • மூக்கில் வடியும் இரத்தம் தொண்டை பகுதிக்குள் செல்லாமல் தடுக்க, தலையை லேசாக முன்பக்கமாக சாய்த்து கொள்ளவேண்டும்.
  • பின்பு கட்டைவிரல் ஆட்காட்டி விரலால் மூக்கைமூடி கொண்டு மூக்கின் மையப்பகுதியில் எலும்பு முடியும் பகுதிக்கு சற்று கீழேவிரல்களை வைத்து அழுத்த வேண்டும். 5முதல் 10நிமிடம் இவ்வாறு செய்தால் ரத்தம் நின்று விடும்.
  • பின்பு. அமைதியாக உட்கார்ந்திருங்கள். உடனடியாகப் படுக்க வேண்டாம். குனியவும் வேண்டாம். தலையானது இருதயத்தை விட உயர்ந்திருந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவதற்கான சாத்தியம் குறைவாகும்.nose-bleading
  • ரத்தம் நிற்காவிட்டால் மூக்கின் மேல் ஒரு மெல்லிய துணியில் ஐஸ்கட்டியை வைத்தால் ரத்தம் வடிவது நின்று விடும். ரத்தம் நின்றதும் மூக்கைப்பிடித்து திருப்பவோ, சீந்தவோ கூடாது. இதுபோன்ற செய்கையினால் ரத்தம் மீண்டும் வர வாய்ப்புள்ளது.
  • அவ்வாறு மீண்டும் ரத்தம் வந்தால் தாமதிக்காமல் மருத்துவரை நாடுங்கள்.