ஆவா குழு என்பது ஒரு மாயை – கைது செய்யபட்டவர் சட்டத்துறை மாணவன் – வி.மணிவண்ணன்.

ஆவா குழு என்பது ஒரு மாயை. அந்த மாயை குழுவினைக் கொண்டு அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்து உள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
ஆவா குழு என்பது ஒரு மாயை. அவ்வாறு ஒரு குழு இல்லை. அந்த குழு இவர் தான் தலைவர் , இவர் தான் செயலாளர் , என அக்குழுவுக்கு எவரும் இல்லை. இந்த மாயைக் குழுவை தமது நிகழ்ச்சி நிரலுக்காக உருவாக்கி உள்ளனர். முன்னர் ஆவா குழுவை சார்ந்தவர் என கூறப்பட்ட நபர் தொடர்ந்து பல மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.
அவ்வாறன நிலையில் மீண்டும் மீண்டும் ஆவா குழு என பயன்படுத்து கின்றார்கள். இந்த மாயையான ஆவா குழுவை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்து கின்றார்கள்.ஆவா குழு ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப் பட்டு விட்டனவா ? எமது கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யபட்டு உள்ளார்.
ஆனால் அவரின் கைதின் காரணம் குறித்து இதுவரை எமக்கோ அல்லது கைது செய்யப்பட்டவரின் பெற்றோருக்கோ தெரியப்படுத்தப் படவில்லை.பத்திரிக்கை செய்திகள் மூலம் ஆவா குழுவுடன் தொடர்பு எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக அறிந்து கொண்டோம்.
கைது செய்யபட்டு 48 மணி நேரம் கடந்த நிலையிலும் , உத்தியோக பூர்வமாக கைதின் காரணம் அறிவிக்கப்படவில்லை. எங்கு தடுத்து வைக்கப்பட்டு உள்ளார் எனும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. எந்த நீதிமன்றிலும் முற்படுத்தப் படவில்லை. இவற்றுக்கு எல்லாம் முற்று முழுதாக அரசியல் காரணமே உண்டு.
பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்ட எமது கட்சியின் செயற்பாட்டாளரான அலெக்ஸ் அரவிந் சட்டத்துறை மாணவன் ஆவான். சட்டத்தரணி எனும் வகையில் என்னுடன் தொடர்பில் இருந்தவன். பல முறை என்னை சந்திப்பதற்காக நீதிமன்றம் வந்து சென்றவன்.
தேடப்படும் குற்றவாளி ஒருவன் நீதிமன்றுக்கு எவ்வாறு வந்து செல்வான். அத்துடன் எமது கட்சியின் செயற்பாட்டாளராகவும் , எழுக தமிழ் நிகழ்வின் போது முன்னின்று செயற்படவனும் ஆவான். என மேலும் தெரிவித்தார்.