வடக்கில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளோம்: சி.வி.

வடக்கில் சில குழுக்கள் பாராதூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளோம் என கவலை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஆவா குழு பற்றி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆவா குழுவை பற்றி பூரண விசாரணை நடத்தாமல் அதன் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் போன்ற விடயங்களை கூற முடியாதெனவும் வடக்கு முதல்வர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, யுத்தம் நிறைவடைந்த கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னரே வடக்கில் குற்றச்செயல்களும் போதைப் பொருள் பாவனையும் அதிகரித்துச் செல்கின்றதென குறிப்பிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் உள்ளபோது இவ்வாறான குற்றச்செயல்கள் நடைபெறுவதானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென மேலும் குறிப்பிட்டுள்ளார்.