மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி காலமானார்

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி உடல் நலக்குறைவு காரணமாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் காலமானார்.

மகாத்மா காந்தியின் மூத்த மகன் ராம்தாஸ் காந்திக்கு பிறந்தவர் கானுபாய். கானுபாய் காந்தி உடல்நலக்குறைவு காரணமாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. இதனையடுத்து காந்தியின் பேரன் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பின்னர் அமெரிக்காவின் மசாஸுசெட்ஸ் நகருக்கு ஜவஹர்லால் நேருவால் அனுப்பி வைக்கப்பட்ட கானுபாய், அங்கு படிப்பை முடித்தார். அதன்பின்னர், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’வின் ஆய்வுக் கூடத்தில் போர் விமானங்களின் இறக்கைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதற்கிடையே, பாஸ்டன் பயோமெடிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றியவரும் டாக்டர் பட்டம் பெற்றவருமான ஷிவலட்சுமியுடன் கானுபாய்க்கு முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் திருமணம் நடந்தது.

அமெரிக்காவில் சுமார் 40 ஆண்டுகள் நன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு தாயகம் திரும்பினர். அவர்களுக்கு உறவினர்கள் அடைக்கலம் அளிக்காததால் முதியோர் இல்லம் மற்றும் ஆசிரமங்களில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் திகதி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகருக்கு வந்த கானுபாய் காந்தி திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.

உடலின் ஒருபக்கம் செயலிழந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள ராதாகிருஷ்ணா ஆலயத்தின் தர்ம ஸ்தாபனத்தால் நடத்தப்படும் ஷிவ்ஜோதி மருத்துவமனையில் அனாதரவான நிலையில் மரணப்படுக்கையில் கிடந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானர்.

இவரது மனைவி ஷிவலட்சுமிக்கு தற்போது 90 வயதாகிறது. காது கேளாமை மற்றும் முதுமைசார்ந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவரும் இங்குள்ள ராதாகிருஷ்ணா ஆலய நிர்வாகத்தினரின் பராமரிப்பில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

1930 மார்ச் மாதம் 12 ஆம் திகதி மகாத்மா காந்தி முன்னெடுத்த தண்டி யாத்திரையின் போது அவரது ஊன்று கோலை முன்னின்று பிடித்தபடி செல்லும் சிறுவனே இந்த கனு காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.