அரசு நிர்வாகங்களை கவனிக்க அதிரடியாக களமிறங்கிய ஜெயலலிதா!

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபடியே, அரசு நிர்வாகங்களை கவனிப்பதாக, அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் திகதியிலிருந்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பிரதாப் ரெட்டி “முதல்வர் வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது. அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் உணர்ந்து வருகின்றார்.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர் எப்போது வீடு திரும்ப வேண்டும் என அவர்தான் முடிவு செய்வார்” என்று கூறினார்.

இந்நிலையில், ஜெ.வின் உடல்நிலை பற்றி கருத்து தெரிவித்த சி.ஆர். சரஸ்வதி “அம்மா முழுவதும் குணமாகி விட்டார். தற்போது அவர் ஓய்வில் இருக்கின்றார்.

மருத்துவமனையில் இருந்தே, அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவு போடுகிறார். அரசு நிர்வாகத்தையும் கவனிக்கின்றார்.

அவரின் உத்தரவுபடி அதிகாரிகளும், அமைச்சர்களும் செயல்பட்டு வருகின்றனர். ஆட்சி நிர்வாகம் நன்றாகவே நடைபெறுகிறது” என்று கூறினார்.