ஜெய்பூர் முதல் பெங்களூர் வரையில் பலரை ஏமாற்றிய டிப்-டாப் பெண் சிக்கினார், விசாரணையில் பரபரப்பு தகவல்

பெங்களூருவில், வக்கீல் வீட்டில் திருடியதாக 8–ம் வகுப்பு தேர்ச்சி அடையாத போலி பெண் வக்கீலை போலீசார் கைது செய்தனர். கைதான பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கைது
பெங்களூரு புலிகேசி நகரில் வசித்து வருபவர் ரமேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). வக்கீல். இவரிடம், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குஷ்பு சர்மா(வயது 25) என்பவர் வக்கீலாக பயிற்சி பெற்று வந்தார். சமீபத்தில் ரமேசின் வீட்டில் இருந்த ரூ.80 ஆயிரம் மற்றும் அவருடைய செல்போன் திருட்டு போனது. இதுகுறித்து, அவர் புலிகேசி நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், குஷ்பு சர்மாவை மோசடி வழக்குகளில் ராஜஸ்தான் மாநில போலீசார் கைது செய்து இருப்பது ரமேசுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, தனது வீட்டிலும் குஷ்பு சர்மா திருட்டை அரங்கேற்றி இருக்கலாம் என அவர் போலீசில் சந்தேகம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து போலீசார் குஷ்பு சர்மாவை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, ரமேசின் வீட்டில் குஷ்பு சர்மா திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், போலீஸ் விசாரணையில் குஷ்பு சர்மா பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அது பற்றிய விவரம் வருமாறு:–
போலி வக்கீல்
8–ம் வகுப்பில் தேர்ச்சி அடையாத குஷ்பு சர்மா அதிகளவு பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டார். இதற்காக, அவர் வக்கீலுக்கு படித்ததாக போலி சான்றிதழ்களை பெற்று கொண்டார். பின்னர், அந்த சான்றிதழ்களை வைத்து வக்கீல் என கூறி வந்த அவர் அவருடைய தந்தை ஐ.பி.எஸ். அதிகாரியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், போலி வக்கீலான குஷ்பு சர்மா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் பல்வேறு தொழில்அதிபர்களை சந்தித்து தொழில் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது தொழில்அதிபர்களுடன் நெருக்கமாக இருப்பதுபோன்று குஷ்பு சர்மா புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர், அந்த படங்களை வெளியிடுவதாக கூறி தொழில் அதிபர்களை மிரட்டி பண வசூலித்து அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த வகையிலான மோசடி வழக்குகள் ஜெய்ப்பூரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் குஷ்பு சர்மாவுக்கு மீது பதிவாகி உள்ளது. இந்த வழக்குகளில் கைதான அவர் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
போலி ‘செக்ஸ்‘ புகார்
புனே போலீசில் போலி ‘செக்ஸ்‘ புகார் அளிப்பதாக தொழில்அதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் குஷ்பு சர்மா கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதும் தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக பெங்களூருவுக்கு வந்த குஷ்பு சர்மா, ஐகோர்ட்டு முன்பு நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு தான் ஐகோர்ட்டில் வக்கீலாக இருப்பதாகவும், தனக்கு வக்கீல் தொழிலை நன்கு கற்றுக்கொடுக்கும்படி கூறி அவர், வக்கீல் ரமேசிடம் பயிற்சி பெற சென்றது தெரியவந்துள்ளது. கைதான குஷ்பு சர்மாவிடம் புலிகேசி நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுவரை 150 பேரை ஏமாற்றி இருப்பது தெரியவந்து உள்ளது. பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி இருந்த அவருக்கு நன்றாக ஆங்கிலம் பேசும் திறமை இருந்தது. இதை பயன்படுத்தி தான் இத்தனை பேரையும் ஏமாற்றி மோசடி செய்து உள்ளார்.