தந்தையின் பாடையை சுமந்து சென்ற மகள்கள்!

இந்து மதத்தை பின்பற்றி வாழ்ந்த ஒருவர் இறந்துப்போனால் அவரது மகனோ, சகோதரரோ, சகோதரர்களின் மகனோ இறந்தவரின் சிதைக்கு தீமூட்டுவது சம்பிரதாயமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி மாவட்டத்தை சேர்ந்த 4 பெண்கள் தங்களது தந்தையின் பிரேதத்தை பாடையில் கிடத்தி, சுடுகாட்டுக்கு சுமந்துசென்று, சிதைக்கு தீமூட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

வாரணாசி நகரில் உள்ள பைடானி பகுதியை சேர்ந்த யோகேஷ் சந்திரா உபாத்யாயா என்பவர் வயதுசார்ந்த பிரச்சனைகளால் சமீபத்தில் இறந்துப் போனார். ஆண்வாரிசு யாருமில்லாமல் ஐந்து பெண்களுக்கு தந்தையாக வாழ்ந்து மறைந்துவிட்ட அவரது இறுதி ஊர்வலத்தை ஐந்து மகள்களும் தாங்களே முன்னின்று செய்யத் தொடங்கினர்.

அதேபோல், அவரது பிரேதத்தை சுமந்து செல்லவும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காத அவர்கள் பாடையில் தந்தையை கிடத்தி,  ரம்யா, கரிமா, சவுமியா, மஹிமா ஆகிய நான்கு மகள்களும் சாலை வழியாக தூக்கிச் சென்றனர். அவர்களின் இந்த முயற்சிக்கு குடும்பத்தினரும் பக்கதுணையாக இருந்தனர்.

அரிசந்திரா கட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் யோகேஷ் சந்திரா உபாத்யாயாவின் சிதைக்கு இரண்டாவது மகளான கரிமா தீமூட்டினார்.

சமுதாயத்தில் நிலவிவரும் ஆண்-பெண் என்ற பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே தனது தந்தையின் சிதைக்கு தீமூட்டியதாக கரிமா குறிப்பிட்டார்.