யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த தமது வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு, பாரிய குழிகள் தோண்டப்பட்டு, மண் அகழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் மீள்குடியேற்றத்திற்காக புதிதாக விடுவிக்கப்பட்ட 454 ஏக்கர் காணிகளை காணி உரிமையாளர்களுக்கு பார்வையிட இராணுவத்தினர் இன்று அனுமதித்திருந்த நிலையிலேயே மக்கள் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு கடந்த 31 ஆம் திகதி திங்கட் கிழமை விஜயம்செய்திருந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 454 ஏக்கர் காணிகளை மீள்குடியேற்றத்திற்காக விடுவிப்பதாக அறிவித்தார்.
இதற்கமைய விடுவிக்கப்பட்ட காணிகளை காணிகளின் உரிமையாளர்களுக்கு இன்று காலை பார்வையிட இராணுவம் அனுமதித்தது. எனினும் காணிகளை பார்வையிட அனுமதிப்பதற்கு முன்னர் குறித்த காணிகளில் இன்னமும், வெடிபொருட்கள் அச்சம் இருப்பதாகவும், இதனால் அவதானமாக காணிகளை சென்று பார்வையிட்டு திரும்புமாறும் அறிவுருத்திய நிலையிலேயே இராணுவத்தினர் மக்களை காணிகளுக்குள் அனுமதித்தனர்.
இதனையடுத்து தமது காணிகள் மற்றும் வீடுகளை கடந்த 27 வருடங்களின் பின்னர் ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள், வீடுகள் இடிந்து தரைமட்டமாக்கப்பட்டதை கண்டு கவலையடைந்துள்ளனர்.
இதேவேளை, தேசிய அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய தற்போது வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, ஜே. 234, ஜே 235, ஜே 246, ஜே 247, ஜே 249, ஜே 250 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 4 ஆயிரத்து 589 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தினர் வசம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.