இலங்கையில் பயங்கரவாதத்திற்கு இணையாக மதுபாவனை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக நாட்டு அரச தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மதுபாவனையை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணைந்து கூட்டு நடவடிக்கையினை எடுத்துள்ளனர்.
கடந்த மூன்று தசாப்தங்களாக காணப்பட்ட தீவிரவாதத்தை விடவும் மதுபானம் மக்களுக்கும் நாட்டிற்கும் அச்சுறுத்தலாகியுள்ளதென்பது இரு அரச தலைவர்களின் கருத்தாகியுள்ளது.
சிங்கப்பூர் – மலேசியா ஆகிய நாடுகளில் போதைப்பொருள் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் கடுமையான சட்டத்திட்டங்கள் தொடர்பில் அந்த நாடுகளிலிருந்து உதவியை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் முன்னெடுக்கும் இந்த நடவடிக்கைக்கு பூரண ஆதரவு வழங்க அமெரிக்காவும் இணக்கம் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் செயற்படுத்தப்படும் போதைப்பொருள் கட்டுப்படுத்தல் சட்டதிட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வு பெற்றுக் கொள்வதற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவை அங்கு அனுப்புவதற்காக நாடாளுமன்ற துணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார்.
கொழும்பில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதைப்பொருள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளமை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவிகள் ஜனாதிபதியிடம் விடுத்து கோரிக்கையை கருத்திற்கு கொண்டு போதைப்பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவித்துள்ளனர்.