அரசு பேருந்துகளில் பயணம் செய்தால் தங்கம், ஐபோன் பரிசு

துபாய் நாட்டில் மெட்ரோ ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு ஒவ்வொரு ஆண்டும் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளதால், இதன் மூலம் வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிப்பிற்குள்ளாகிறது.

இதனை தடுக்கும் விதத்தில் அரசு பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் பொதுமக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு தங்கம், அப்பிள் போன், ஆண்ட்ராய்டு போன், ஐபேட் உள்ளிட்ட பல பரிசுகளை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது.

நடப்பாண்டில் 30 பயணிகளை தெரிவு செய்து அவர்களுக்கு 50 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 30 பேரில் தமிழ்நாட்டை சேர்ந்த சாந்தி ராபின் என்ற பெண்மணியும் ஒருவர். இவர் துபாய் நாட்டில் வீட்டு வேலை செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

தங்கம் வாங்கியது குறித்து சாந்தி ராபின் பேசியபோது, ‘தமிழகத்தில் வறுமையின் காரணமாகவும் 4 பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் துபாய் நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்தேன்.

எனது வருமானத்தை நம்பி தான் எனது ஒட்டுமொத்த குடும்பமும் இருக்கிறது.

தற்போது துபாய் அரசு வழங்கியுள்ள இந்த தங்கம் என் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பெரும் உதவியாக இருக்கும்’ என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.