திருமண தடை நீக்கும் பள்ளிகொண்ட பெருமாள்

தென் தமிழகத்தின் ஸ்ரீரங்கம் போல, வடதமிழகத்தின் புகழ்மிக்க ஆலயமாக திகழ்வது, பாலாற்றின் ஓரம் உள்ள உத்திர ரங்கநாதர் கோவில். பிரம்மனின் யாகத்தைக் காத்தருளியவர் இந்தப் பெருமாள். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள இந்த ஆலயம், இந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கியதலம், ஆண்டாளை மணம் முடித்தது போல், பள்ளிகொண்டாவில் செண்பகவல்லியை மணம் புரிந்த தலம் என பல்வேறு பெருமைகளைக் கொண்டதாக திகழ்கிறது.

திரேதாயுகத்தில் தேவேந்திரன் தன் மனைவி இந்திராணியோடு வனத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது கிளி வடிவில் கூடியிருந்த ரிஷிகளை கொன்றான். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் வேண்டி நின்ற இந்திரன், காச்சயப்ப முனிவர் அறிவுரைப்படி, பள்ளிகொண்டா தலத்து வியாச புஷ்கரணியில் நீராடி, ஓராண்டு காலம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதரைத் தரிசித்து, தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.

இத்தலம் பதினாறு வகை செல்வங்களையும் அள்ளித் தரும் தலமாகப் போற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருமணப்பேறு வழங்கும் தலமாக திகழ்வதால், இங்கே திருமண வைபவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. நீண்டகாலம் திருமணம் தடைபட்டவர்கள், இங்கு வந்து வேண்டிசென்றால் விரைவில் திருமணம் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

வேலூர் மாவட்டம், வேலூர் வட்டத்தில் பாலாற்றின் தென்கரையில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. தெற்கே பீஜாசலம் எனும் வித்துமலை இருக்கிறது. சென்னைக்கு மேற்கே 150 கிலோமீட்டர், வேலூர் – குடியாத்தம் வழித்தடத்தில், வேலூருக்கு மேற்கே 23 கிலோமீட்டர், ஆம்பூருக்கு கிழக்கே 25 கிலோமீட்டர், குடியாத்தத்திற்குத் தென்கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், பள்ளிக்கொண்டான் ஆலயம் உள்ளது.