ரஜினிகாந்தின் பழைய படங்கள் மீண்டும் தயாராகி வருகின்றன. ஏற்கனவே அவருடைய ‘பில்லா’ படம் அஜித்குமார் நடித்து வெளிவந்தது. தனுஷ் நடிப்பில் ‘மாப்பிள்ளை’ மற்றும் ‘முரட்டுக்காளை’ படங்களும் வெளிவந்தன.
தற்போது மூன்று முகம் படமும் மீண்டும் தயாராகிறது. இந்த படம் 1982-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடித்து இருந்தார். அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி வேடம் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் நடித்ததற்காக ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது கிடைத்தது.
இந்த படத்தில் இடம்பெற்ற ‘நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு,’ ‘தேவாமிர்தம் ஜீவாமிர்தம் கண்ணா’ உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. மூன்று முகம் ‘ரீமேக்’ படத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். போலீஸ் அதிகாரி அலெக்ஸ் பாண்டியன் உள்பட மூன்று தோற்றங்களில் அவர் வருகிறார். இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. டைரக்டர் இன்னும் முடிவாகவில்லை.
இந்த படத்தை லாரன்சுடன் இணைந்து தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் கதிரேசன் தயாரிக்கிறார். வசூல் சாதனை நிகழ்த்திய ‘காஞ்சனா-2’ படத்தை தொடர்ந்து ‘மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா’ போன்ற படங்களில் லாரன்ஸ் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்து விட்டு ‘மூன்று முகம்’ படத்தில் நடிக்கிறார்.