அதிக சக்திவாய்ந்த ராக்கெட்டை விண்ணில் ஏவிய சீனா

சக்திவாய்ந்த, அதிகமான பளுவை சுமந்து செல்லும் ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்திள்ளது.

சீன விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக, 2 விஞ்ஞானிகளுடன் விண்கலத்தை ஏந்தியபடி கடந்த அக்டோபர் 17-ம் தேதி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது சக்திவாய்ந்த, அதிகமான பளுவை சுமந்து செல்லும் ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

நிரந்தர விண்வெளி மையம் போன்ற சீனாவின் எதிர்கால விண்கல ஆய்வுக்கு இந்த ராக்கெட் உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிதாக உருவாக்கப்பட்ட லாங் மார்ச்-5 என்ற இந்த ராக்கெட் தெற்கு ஹைனன் மாகாணத்தில் உள்ள வெங்சாங் விண்கல ஏவுதள மையத்தில் இருந்து நேற்று இரவு 8.43 மணியளவில்(சீன நேரப்படி) விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்ட 40 நிமிடங்களில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு ஜின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாங் மார்ச்-5 சீன வரலாற்றிலேயே மிகப்பெரிய ராக்கெட் ஆகும். 25 டன் எடை கொண்ட இரண்டு கட்டங்களாக செல்லக்கூடிய ராக்கெட் இது.

சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் தகவலின்படி இந்த ராக்கெட்டில் கெரோசின் மற்றும் திராவக ஆக்ஸிஜன் ஆகிய இரண்டு எரிபொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.