அந்தமான் அருகே நிலை கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

அந்தமான் அருகே நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் வங்கக் கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியது. இதனால் தமிழகத்தில் பரவலான மழை பெய்து வந்தது. சென்னையிலும் அனேக இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக இரவு நேரத்தில் மழை பெய்தது.
புயலாக மாற வாய்ப்பு
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக் குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது தென்கிழக்கே சுமார் 570 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டு உள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர ஆரம்பித்து உள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்து உள்ளது.
மேலும் நிலைகொண்டு உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 72 மணி நேரத்தில் கடற்பரப்பிலேயே புயலாக மாற வாய்ப்புண்டு. அப்படி இது புயலாக மாறுவதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில், தென்தமிழகத்தின் அனேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்தமிழகத்தின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையோ அல்லது கனமழை பெய்யவோ வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடனே காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த, கடந்த 24 மணி நேர கால அளவீட்டின்படி தமிழகத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. காரைக்காலில் 11 செ.மீ மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 6 செ.மீ மழையும் பெய்து உள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் குடவாசல், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ராமநாதபுரம், திருவள்ளூர், தஞ்சை, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து உள்ளது.
10 சதவீதம் குறைவு
இந்திய வானிலை மையத்தின் நீண்ட கால வானிலை ஆய்வு மற்றும் அறிக்கையின்படி, இந்த ஆண்டு சராசரி அளவை விட 10 சதவீதம் குறைவாகவே வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த விவரம் பல்வேறு சூழல்கள், ஆய்வுகள் மற்றும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தெரியவந்தது.
மீனவர்கள் அழ்கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். குறிப்பாக ஆந்திராவின் கடலோர பகுதிகளை நோக்கி மீனவர்கள் யாரும் செல்லவேண்டாம்.