வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள். திண்டுக்கல் அருகே பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மோதுப்பட்டி கிராமத்தில் ஆகாயத்தில் இருந்து விழுந்த மர்மப் பொருளால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 11 மணியளவில் ரங்கசாமி என்பவர் மோதுப்பட்டி கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் தக்காளி பறித்துக் கொண்டு இருந்தார். அப்போது வானில் இருந்து ஒரு மர்மப் பொருள் பயங்கர சத்தத்துடன் அருகில் இருக்கும் தோட்டத்தில் விழுந்துள்ளது. அப்போது, அந்தப் பொருளை சுற்றி புகையும் வந்துள்ளது. உடனடியாக அந்த இடத்தில் இருந்து ஓடி, அருகில் இருக்கும் கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் ரங்கசாமி புகார் அளித்தார். உடனடியாக காவல்துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கீழே விழுந்த பொருள் அலுமினிய சிலிண்டர் வடிவில் இருந்துள்ளது. அந்தப் பொருளால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பொருளை தொட்டுப் பார்த்தவர்கள், கடினமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மதுரையில் உள்ள தடய அறிவியல் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மதுரை தடய அறிவியல் உதவி இயக்குனர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின்னர் பாஸ்கரன் கூறுகையில், ”இந்த மர்மப் பொருள் விமானத்தில் இருந்து விழுந்து இருக்கலாம்” என்றார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் கூறுகையில், ”ஒட்டன்சத்திரம் அருகே வானில் இருந்து மர்மப் பொருள் விழுந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்த தடய அறிவியல் நிபுணர்கள், தாழ்வாக பறந்த விமானத்தில் இருந்து அந்த பொருள் விழுந்து இருக்கலாம் என தெரிவித்தனர். ஆய்வுக்குப் பின்னர் உறுதியாக தெரிய வரும்” என்றார்.

தற்போது அந்தப் பொருளை புதைகுழி தோண்டி அதில் புதைத்து விட முடிவு செய்துள்ளனர்.