ராஜபக்சர்களின் ஆதரவிற்காக வந்த ஞானசார தேரர் ஆபத்தில்! அம்பலமானது இரட்டை வேடம்

தற்போது இலங்கையில் அதிகம் பேசப்படுகின்ற விடயம் சிவனொளிபாத மலை பறிபோய்விட்டது புனித இடம் சொகுசு ஹோட்டலாக மாறியுள்ளது என்பதே.

இது தொடர்பில் ஒருவர்மீது ஒருவர் மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் தரப்பும், மதவாதிகளும், பொதுமக்களும் கருத்துகளை முன்வைத்து வரும் வேளையில் ஞானசார தேரரும் நேற்று ஊடகங்களுக்கு கருத்தொன்றை வழங்கியுள்ளார்.

நாட்டில் இடம் பெறுகின்ற பாரிய காணி கொள்ளைக்கு அமைச்சர் பைஸர் முஸ்தப்பாவும் அவரது குடும்பத்தாருமே காரணம் எனவும் அவரை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இவர் இந்தக் கருத்துகளை முன்வைத்தது தற்போது சிவனொளிபாத மலை தொடர்பில் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள பசில் ராஜபக்சவை காப்பாற்றுவதற்காகவே என்றே தென்னிலங்கை தரப்பு கூறிவருகின்றது.

ஞானசார தேரர் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டில் முக்கியமானதொரு புள்ளி என்பதால் இவர் பசிலுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருப்பது என்னமோ பசில் மீது உள்ள விமர்சனங்கள் பைஸர் மீது திரும்பிவிடும் என்ற காரணத்திற்காக என்பது வெளிப்படையாக தெரிந்து விட்டது.

ஆனாலும் இதே ஞானசார தேரர் கடந்த காலத்தில் சிவனொளிபாத மலை தொடர்பில் எச்சரிக்கை தோரணையில் பகிரங்கமான கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்.

‘சிவனொளிபாத மலை முஸ்லிம்கள் கைக்கு செல்வதற்கு காரணம் பசில் ராஜபக்சவே அதனை நாம் வெளிப்படையாக கூறுவோம் அவரே இதற்கு முழுக்காரணம்”

“இவை ராஜபக்சர்களின் பரம்பரையில் வந்த சொத்துகள் அல்ல தேசத்தின் சொத்துகள் பொய்யான நாடகங்களை அரங்கேற்ற கூடாது இவை அனைத்தையும் ராஜபக்சர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்”

 

இவை ஞானசார தேரர் மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக வெளியிட்ட கருத்துகள். ஆனால் தற்போது ஊடகங்களிடம் பசில் ராஜபக்சவின் பெயரை உபயோகிக்கவில்லை.

மக்கள் முன்னிலையில் பசில் ராஜபக்ச மீது பழி சுமத்தியவர் தற்போது பின்வாங்கிவிட்டார். இது அவரது இலாபம் நோக்கான அரசியலின் வெளிப்பாடு என கூறப்படுகின்றது.

இதேவேளை அண்மைக்காலமாக மஹிந்த ராஜபக்சர்களுக்கு ஆதரவு கருத்துகளை வெளியிட்டு வரும் ஞானசார தேரர் கடந்த காலங்களில் அவர்களுக்கு எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிவனொளிபாத மலை விவகாரத்தினால் பௌத்தர்களின் ஆதரவை இழந்து வரும் ராஜபக்சர்களுக்கு ஆதரவு தேடும் வகையிலேயே இவர் தற்போது கருத்து வெளியிட்டு வருகின்றார்.

இவை மூலம் அரசியல் இலாபங்களுக்காக ஞானசாரதேரர் இரட்டைவேடக் கருத்துகளை முன்வைத்து வருகின்றார் என்பது தெளிவாகின்றதாக தென்னிலங்கை புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலத்தில் ஊடகங்களுக்கு முன் வராத ஞானசார தேரர் தற்போது முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவருக்கு இருக்கும் ஓரளவு மக்கள் செல்வாக்கும் இழந்துவிடும் அபாயம் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.