நயன்தாராவுக்கு முன் ஜோதிகா… தயங்கிய பிரகாஷ்ராஜ்! ‘சிவகாசி’ பற்றி 6 ரகசியங்கள்

“ரஜினி ஸ்டைலில் ஒரு விஜய் படம் பண்ணனும்னு, நான் ரொம்ப மெனக்கெட்டு பண்ணின படம் திருப்பாச்சி. திருப்பாச்சி ரிலீஸாகி பத்தாவது நாள், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் எனக்கு போன் பண்ணினார். ‘விஜய், அடுத்தப் படத்தை ஸ்ரீ சூர்யா மூவிஸ்க்கு தான் பண்றார். அவர் தான் உங்ககிட்ட பேச சொன்னார். மீட் பண்ணலாமா’னு கேட்டார். நானும் அவருக்கு ஓகே சொல்லிட்டு, விஜய்க்கு போன் பண்ணி கேட்டேன். “ஆமாணா, அடுத்தப் படமும் சேர்ந்து பண்ணலாம். கதை ரெடியா இருக்காணா’னு கேட்டார். ரெடியா இருக்குனு படத்தோட ஒன் லைனை சொல்லி ஓகே வாங்குனேன். அடுத்த ஒரு மாசத்துல முழு படத்தையும் எழுதிட்டேன். இப்படி தான் சிவகாசி படம் உருவாச்சு” என சிவகாசி படம் வந்து 11 வருஷங்கள் ஆனாலும், அன்று நடந்த விஷயங்களை மறக்காமல் சொல்ல ஆரம்பித்தார் இயக்குநர் பேரரசு.
“திருப்பாச்சி ஹிட்டானப் பிறகு விஜய் என்னை நம்பி கொடுத்த படம் சிவகாசி. முதல் படத்தை போலவே இரண்டாவது படத்தையும் ஹிட்டாக்கணும்ங்கிற வெறி எனக்குள்ள இருந்தது. சிவகாசி படத்தோட இரண்டாம் பாதியில விஜய், வில்லன்களை ஆக்ரோஷமாக எதிர்க்கிற மாதிரி தான் எழுதினேன். அதுக்கப்பறம், திருப்பாச்சியும் சிவகாசியும் ஒண்ணாகிடுமேனு, வில்லன் பிரகாஷ்ராஜை காமெடியாகவே பலி வாங்குற மாதிரி மாத்தினேன். ரைஸ் மில் சீன், தேர்தல் சீன்னு காமெடிக்கான களத்தை உருவாக்கி படத்தை ஆக்ஷன், காமெடியாகவே கொண்டு போனேன். அதுமட்டுமில்லாம, வில்லன் ஹீரோக்கு அண்ணனாக இருந்தனால அதிகமாக அடிக்கிற மாதிரி காட்சிகள் வைக்கக்கூடாதுன்னும் முடிவு பண்ணினேன். முழு கதையை விஜய்கிட்ட சொன்னதும் காமெடி ரொம்ப சூப்பரா இருக்குன்னு குஷியாகிட்டார். அவர் முகத்தில் தெரிஞ்ச அந்த சந்தோஷத்திலேயே நான் சிவகாசி படத்தோட வெற்றியை உறுதி செஞ்சுட்டேன்.
அதே மாதிரி படத்தோட ஷூட்டிங் சிவகங்கையில் எடுக்கிறதால ரசிகர்கள் அதிகமா வந்துட்டா, உங்களால சரியா ஒர்க் பண்ண முடியாது. அதுனால வேற லோக்கேஷன் போய்கலாமானு விஜய் கேட்டார். அப்படி எது நடந்தாலும் பரவாயில்லை, படத்தோட கதைக்கு அந்த இடம் தான் கரெக்ட்டா இருக்கும்னு அவரிடம் சொல்லிட்டு ஷூட்டிங் போனோம். விஜய் மாதிரி விஜய் ரசிகர்களும் ரொம்ப அமைதியானவங்க, ஷூட்டிங்ல எங்களுக்கு எந்த பிரச்னையும் கொடுக்காம நல்லபடியாக படத்தை முடிக்க உதவுனாங்க.

கதையை எழுதும் போதே பிரகாஷ்ராஜ் தான் வில்லன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனால் அவர் அப்போ தான் வில்லன் வேடங்களில் இருந்து வெளியே வந்து மொழி, அபியும் நானும் மாதிரி வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். அதனால, அப்பா இறப்புக்கு காரணமான பையனாகவும், அம்மா-தங்கச்சியை பார்த்துக்காத பையனாகவும் நடிக்க அவர் தயங்கினார். அவரை ரொம்ப சமாதானப்படுத்தி தான் இந்த படத்தில் கமிட் பண்ணுனேன். அவரோட கதாப்பாத்திரமும் படத்திற்கு பலமாக இருந்தது.
சிவகாசி படத்துல விஜய்க்கு அம்மாவாக முதலில் ஜெயசுதாவை தான் நடிக்க கேட்டோம். அப்போ அவங்களால ஹைதராபாத்தை விட்டு வர முடியாத சூழ்நிலையில் இருந்தாங்க. ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் வச்சுக்கிட்டா எனக்கு ஓகே சார்னு சொன்னாங்க. ஆனால், நாட்டரசன்கோட்டையில ஷூட்டிங் எடுத்தாதான் லைவ்வா இருக்கும்னு, கீதாவை நடிக்க வைச்சோம்.
சிவகாசி படத்துல பாடல்கள் எல்லாம் பக்கா ஹிட். அதற்காக ஸ்ரீகாந்த தேவாவிற்கு தான் நன்றி சொல்லணும். ஆனால் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், சிவகாசி படத்துக்கு பெரிய இசையமைப்பாளர்களில் ஒருவரைத் தான் கமிட் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், நான் பிடிவாதமாக நின்று ஸ்ரீகாந்த் தேவாவை கமிட் செய்தேன். பாடல்களை கேட்டப்பின்பு தான் நினைத்திருந்த பெரிய இசையமைப்பாளர்விட ஸ்ரீகாந்த் தேவா பிரமாதமாக இசையமைத்திருப்பதாக ரத்னம் சொன்னார்.
பாடல்கள் என்றதும் ‘கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாரியா..? குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா..?’ பாடலை மறக்கமுடியாது. அந்த பாட்டுல விஜய்யும் நயன்தாராவும் படு பயங்கரமா ஆடியிருப்பாங்க. ஆனால், அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆட முதலில் ஜோதிகாவை தான் கேட்டோம். ஆனால் அந்த டைம்ல தான் சூர்யா-ஜோதிகா கல்யாண ஏற்பாடு நடந்திட்டு இருந்தது. அதனால அவங்களால நடிக்க முடியலை. அப்போ தான் சந்திரமுகி படம் வந்து நயன்தாரா அதிக படங்கள் நடிக்க ஆரம்பிச்ச டைம். நாங்க ஒரு பாட்டுக்கு ஆட அழைச்சதும் ஐட்டம் டான்ஸ்னு நினைச்சு ‘மாட்டேன்’னு சொல்லிட்டாங்க. அதுக்கப்பறம் படத்தோட கதையை அவங்ககிட்ட சொல்லி, பாட்டை கேட்க வைச்சு ஓகே பண்ணினோம். இன்றைக்கும் அந்த பாடலை யாராலும் மறக்கமுடியாது. இப்படி பல விஷயங்களை சிவகாசி படம் எனக்கு ஞாபகப்படுத்தும். இன்று அந்த படம் வந்து 11 வருஷம் ஆச்சு. மக்கள் இன்னும் அந்த படத்தை மறக்கலைனு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமான இருக்கு” என்றவரிடம், சிவகாசி படத்தோட இரண்டாம் பாகம் எடுக்கிற எண்ணம் இருக்கா என்று கேட்டோம்.
“இரண்டாம் பாகம் எடுக்கிறதா இருந்தா திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதினு என்னோட எல்லா படத்தையும் எடுக்கலாம். ஆனால், அபப்டி எடுக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை” என்றவர், தன்னோட அடுத்தப்படத்தை பற்றின அப்டேட்டையும் பதிவு செய்தார். “சமீபத்தில் சின்ன சின்ன படங்கள் பண்ணி, அது எதுவும் செட்டாகலை. அடுத்து படம் பண்ணினா பெரிய படமாக தான் இருக்கணும்னு முடிவு பண்ணி, அதற்காக வேலைகளையும் தொடங்கிட்டேன். சிவகாசி படத்தின் இரண்டாம் பாகம் வராது. ஆனால், கண்டிப்பாக விஜய் பேரரசு கூட்டணியில் இன்னொரு படம் வரும்” என்று நம்பிக்கையுடன் முடித்தார் இயக்குநர் பேரரசு.