1000 ரூபாய் பணத்துக்காக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

கொல்கத்தாவில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்ய மருத்துவமனை உதவியாளர்கள் மறுத்துவிட்டதால் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் R G Kar என்ற மருத்துவ கல்லூரியில் ரேஷ்மா என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சுகப்பிரசவம் நடந்த இந்த பெண்ணுக்கு மேற்கொண்டு சிகிச்சையளிக்கப்படவில்லை. இதனால் இப்பெண்ணின் கணவர் மருத்துவமனை உதவியாளரை அணுகியுள்ளார்.

ஆனால், உதவியாளரோ லஞ்சமாக ரூ.1000 கொடுத்தால் மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

ஆனால் அப்பெண்ணின் கணவரான லஷ்கரிடம் வெறும் 125 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. இருப்பினும் தன்னிடம் இருந்த தொகையை கொண்டு வந்த உதவியாளரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், உதவியாளரோ தான் கேட்ட தொகை கிடைக்காத காரணத்தால் லஷ்கருடன் வாக்குவாதம் செய்ததோடு மட்டுமல்லாமல், நாங்கள் உங்கள் மனைவிக்கு சிகிச்சை அளிக்கமாட்டோம் என மறுத்துள்ளார்.

இதனால் சிகிச்சை காரணமாகிய தாமத்தால் ரேஷ்மா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த இப்பெண்ணின் கணவர் உட்பட உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த பொலிசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மேலும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் இதுகுறித்து முறையிடப்பட்டுள்ளதால் அவர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.