மின்னஞ்சல் மோசடி: ரூ.14 கோடியை மொத்தமாக இழந்த தொழிலதிபர்

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் மின்னஞ்சல் மோசடிக்கு இரையான வளரும் தொழிலதிபர் ஒருவர் 14 கோடி ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் பூனேவில் பிம்பிரி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் அமெரிக்கா சென்று அங்குள்ள ஒரு நிறுவனத்துடன் சில எந்திரங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டார்.

அங்கிருந்து திரும்பி வந்த சில நாட்களில் இவருக்கு மிகவும் அவசரம் என்ற தலைப்பில் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் இவர் ஒப்பந்தம் மேற்கொண்ட குறித்த பொருட்களுக்கான ரசீதும் வங்கி கணக்கும் குறிப்பிட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த நிறுவனத்திற்கு ரூ.12.18 கோடியை (இந்திய மதிப்பில்) அனுப்பியுள்ளார். இந்த நிலையில் இவர் அனுப்பி வைத்த பணம் வேறொரு வங்கி கணக்கில் மற்றப்பட்டதை அறிந்து அதற்கு எதிராக செயல்படுவதற்கு முன்னரே கானா நாட்டில் உள்ள ஒருவர் அந்த மொத்த பணத்தையும் வங்கியில் இருந்து எடுத்துள்ளது தெரிய வந்தது.

இதில் அதிர்ச்சியடைந்த குறித்த தொழிலதிபர் உடனடியாக பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் தொலைந்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பே இல்லை எனவும் இந்த மோசடிக்கு ’email spoofing’ எனவும் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். மட்டுமின்றி இதுபோன்ற மோசடிகள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இயக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, பூனேவின் பாவ்தான் பகுதியில் வளர்ந்து வரும் தொழிலதிபர் ஒருவர் தமது நிறுவனத்திற்காக சில இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்காக ஜேர்மனியில் இருக்கும் பிரபல நிறுவனத்திடம் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில் அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்த இயந்திரங்களுக்கான தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தவும் இவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனிடையே இவருக்கு குறித்த ஜேர்மன் நிறுவனத்திடம் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் முதல் தவணையாக ரூ.1.82 கோடியை (இந்திய மதிப்பில்) குறித்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் என்று அந்த மின்னஞ்சல் தகவல் தெரிவித்துள்ளது.

குறித்த மின்னஞ்சல் தகவல்கள் ஏற்கனவே இவர் ஒப்பந்தம் போட்டிருந்த நிறுவனத்தின் தகவல்கள் அனைத்தையும் குறிப்பிட்டிருந்ததால், உடனடியாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்கிற்கு குறித்த தொகையை அனுப்பியுள்ளார்.

ஆனால் சில நாட்களிலையே தாம் போலி மின்னஞ்சலால் ஏமாற்றப்பட்டுள்ளதை அவர் தெரிந்து கொண்டார். மட்டுமின்றி குறித்த ஜேர்மன் நிறுவனமும் பணம் எதுவும் தாங்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்று மறுத்துள்ளது.

இதனையடுத்து தமக்கு வந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் மீண்டும் சோதனையிட்ட அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தாம் ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனத்தின் அதே பெயரில் ஒரு போலி நிறுவனத்திடம் இருந்து தமக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டார்.

இதனையடுத்து தமக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அவர் புகார் தெரிவித்ததை அடுத்து பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதில், இவரிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட பணமானது நைஜீரியாவில் இருக்கும் ஒரு நிறுவனம் வழியாக போலந்து நாட்டிற்கு திருப்பி அனுப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.