போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட அதிபர், ‘அதிபர்’ எனக் குறிப்பிடப்பட்டாலும், அவர் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரி அல்ல என இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் இன்று (14) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயினுடன் கடந்த மாதம் 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அதிபர் சேவைக்கு செய்யப்படும் அநீதி
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிகாரி ‘அதிபர்’ எனக் குறிப்பிடப்பட்டாலும், அவர் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரி அல்ல.
அவர் இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரி என்பது உறுதியாகியுள்ளதுடன், அவர் அதிபர் பதவியை தற்காலிகமாகப் பொறுப்பேற்று (Covering duties) பணியாற்றியுள்ளார்.
‘அதிபர்’ என்று அழைக்கப்படக்கூடியவர்கள் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரிகள் மாத்திரமே என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் மேலும் கூறுகையில், அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரிகள் அல்லாதவர்கள் இவ்வாறு ‘அதிபர்’ என்ற பெயரைப் பயன்படுத்துவது அதிபர் சேவைக்கு செய்யப்படும் அநீதியாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், குறித்த நபர் பற்றிய தகவல்களை வெளியிடும்போது, அவரை “இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரி” என்று அடையாளப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.







