இந்தியாவில் வேகமெடுக்கும் இன்ஃப்ளூவன்சா வைரஸ் இலங்கையர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை!

இந்தியாவில் வேகமாக பரவிவரும் இன்ஃப்ளூவன்சா வைரஸ் தொடர்பில் இலங்கையர்கள் அச்சமடைய தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

H3N2 என அறியப்படும் குறித்த இன்ஃப்ளூவன்சா வைரஸ் தொற்று தொடர்பில் எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில், பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வடக்கு பிராந்திய மாநிலங்களில் இந்த வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்கிறது.

இந்த நிலையில், இலங்கையிலும் H3N2 என அறியப்படும் குறித்த இன்ஃப்ளூவன்சா வைரஸ் பரவக்கூடும் என அச்சம் வெளியிடப்படுகிறது.

அதன்படி, இலங்கையில் இதற்கான சாத்தியங்கள் காணப்படுகிறதா?, அதன் தாக்கங்கள் அதிகரிக்குமா? உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பிரதி சுகாதார அமைச்சரிடம் எமது செய்தி சேவை வினவியது.

இதற்கு பதில் வழங்கிய பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, H3N2 என அறியப்படும் குறித்த இன்ஃப்ளூவன்சா வைரஸ் சாதாரண வைரஸ் தொற்றாகவே காணப்படும் எனக் கூறியுள்ளார்.

இதனால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் மக்கள் இந்த வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை எனவும், தொற்று ஏற்பட்டால் வழமையாக சிகிச்சைகளை பெறும் வகையில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது போதுமானதாக அமையும் எனப் பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி சுட்டிக்காட்டியுள்ளார்.