யாழில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில், மருத்துவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உரும்பிராய் பகுதியில், இரண்டு தினங்களுக்கு முன்னர் மருத்துவர் ஒருவர் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த குழுவினர் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த மருத்துவர் தான் செல்வதற்கு வழி விடுமாறு கூறியவேளை, அவர் மீது அந்தக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.