ஜப்பானில் பூனைகளை துன்புறுத்திய பெண் கைது!

ஜப்பானின் குமாமோட்டோ பகுதியில் பூனைகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் செப்டெம்பர் 18 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குமாமோட்டோ நகரத்தின் கிட்டா வார்டைச் சேர்ந்த 51 வயதான பெண் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குமாமோட்டோ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில், 13 பூனைகளுக்கு முறையான உணவு அளிக்காமல், மலங்கள் மற்றும் பிற பூனை சடலங்கள் நிறைந்த சுகாதாரமற்ற சூழலில் அவற்றை வைத்து, பட்டினியால் சாகடித்ததாக அந்த பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், 12 பூனைகளை மோசமான நிலையில் பராமரித்து துன்புறுத்தியுள்ளதாகவும் அந்த பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து 132 பூனைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

“நான் பராமரிப்பு பணிக்காக எடுத்துக்கொண்ட பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவற்றைப் பராமரிப்பதற்கான செலவும் முயற்சியும் அதிகரித்தன. அது படிப்படியாக எனக்கு சிரமமாக மாறியது,” என்று அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

விலங்கு நலச் சட்டத்தை மீறியதாக இந்த பெண் மீது நகர நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது.