இராணுவ வீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நடாத்தப்பட்ட பல்துறை மருத்துவ முகாம்களின் 7 வது கட்டம் வெள்ளிக்கிழமை (19) அம்பாறை, கொண்டுவட்டுவான் இலங்கை இராணுவ போர் பயிற்சிப் பாடசாலையில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வசிக்கும் காயமடைந்த போர்வீரர்கள், வீரமரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற வீரர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் உட்பட 1250 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
போர் வீரர் விவகாரம் மற்றும் புணர்வாழ்வு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மருத்துவ முகாமில், மருத்துவப் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வுகளை வழங்குதல், தொழில்சார் சுகாதார ஆலோசனை, மனநல ஆலோசனை, பல் வைத்திய சேவைகள், நடமாடும் மருத்துவ ஆய்வக சேவைகள், செயற்கை கால்கள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்குவதற்கான பரிசோதனைகள், நடமாடும் கண் மருத்துவ பரிசோதனை, பிசியோதெரபி மருத்துவமனைகள் மற்றும் பல சேவைகள் வழங்கப்பட்டன.
உயிர்நீத்த போர் வீரர்களின் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள், போரில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினரின் பிரச்சினைகளையும் ஆராய ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், காயமடைந்த போர் வீரர்களுக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், மூக்குகண்ணாடிகள் மற்றும் தேவையான அறுவை சிகிச்சை உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன.
மேலும் இதற்கு இணையாக பாதுகாப்பு அமைச்சு, ரணவிரு சேவைகள் ஆணையம் மற்றும் இராணுவ பணிப்பகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளால் போர்வீரர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் நிலம், வீட்டுவசதி, சம்பளம் மற்றும் ஏனைய நிர்வாக பிரச்சினைகள் குறித்து தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.







