பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்த அமெரிக்கா

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை அமெரிக்கா ரத்துச் செய்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்யப்பட்டுள்ளார் என்பதை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், விசாக்களை மறுப்பது அல்லது ரத்து செய்வது என்ற அமெரிக்காவின் நடவடிக்கை அந்தந்த அரசாங்கங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான “உறவுகளைப் பொருட்படுத்தாமல்”, நியூயோர்க்கில் வெளிநாட்டு அதிகாரிகள் வருகை அமெரிக்காவால் தடைபடாது என்று கோடிட்டுக் காட்டும் ஐக்கிய நாடுகளின் ஆவணத்துடன், இந்த விசா ரத்து நடவடிக்கை இணங்குகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பிபிசி கூறுகிறது.

அமைதி முயற்சிகளை குறைமதிப்புக்கு உட்படுத்தியதற்காகவும், “பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஒருதலைப்பட்சமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்று கோரியதற்காகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

எனினும் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக, இந்த அமர்வின் போது, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு பிரான்ஸ் தலைமை தாங்குவதால் இந்தத் தடை வந்துள்ளதாக கருதப்படுகிறது

முன்னதாக, ஐக்கிய நாடுகளுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர், நாட்டின் தூதுக்குழுவின் தலைவராக, நியூயார்க்கில் நடைபெறும் நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தில் அப்பாஸ் கலந்து கொள்வார் என்று கூறியிருந்தார்.