இலங்கை முறையில் காரசாரமான சிக்கன் கறி!

பொதுவாக இலங்கையில் வாழும் மக்கள் காரசாரமான உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

அவர்களை பொறுத்தவரையில் அனைத்து உணவுகளும் காரமாக இருக்க வேண்டும் என ஆசைக் கொள்வார்கள். இதனால் அவர்கள் செய்யும் உணவுகளில் மிளகுத்தூள் அதிகமாக பயன்படுத்துவார்கள்.

சிங்களவர்களின் உணவுகளில் மிளகு இல்லாமல் இருக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் சிக்கன் கறி இலங்கை மக்கள் சாப்பிடும் சுவையில் சமைப்பது எப்படி என்பதை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம்- 1
மிளகாய்- 4
கறிவேப்பிலை- கொஞ்சம்
ரம்பை- 2 துண்டு
கிராம்பு, ஏலக்காய் – 2 அல்லது 3
தக்காளி- 2
கொத்தமல்லி தழை- கொஞ்சம்
மிளகாய் பொடி- 3 மேசைக்கரண்டி
மஞ்சள்- 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள்- 2 மேசைக்கரண்டி
மசாலாத்தூள் – 1, 1/2 தேக்கரண்டி
சிக்கன் மசாலாத்தூள்- 1 மேசைக்கரண்டி
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் தேவையான அளவு சிக்கன் எடுத்து, நன்றாக கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தனியாக வைக்கவும்.

அதன் பின்னர் ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு வெந்தயம் போட்டு தாளிக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதங்க விட்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் கறிவேப்பிலை, ரம்பை சேர்க்கவும். அப்போது வாசம் வர ஆரம்பிக்கும்.

இது ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், கழுவி வைத்திருக்கும் சிக்கனில் மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், சிக்கன் மசாலாத்தூள், மிளகுத்தூள், தக்காளி மற்றும் உப்பு ஆகிய பொருட்களை போட்டு கலந்து விட்டு 30 நிமிடங்கள் அதனை ஊற வைக்கவும்.

அந்த கலவையை தாளிப்பு வதங்கியவுடன் சேர்க்கவும். சேர்த்து சிறிது நேரம் எண்ணெய் சிக்கனை வேக வைக்கவும். அதன் பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு, மூடிப்போட்டு வேக வைக்கவும்.

சிக்கன் 3 அல்லது 4 கொதியில் வெந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் காரசாரமான சிக்கன் கறி தயார்!