மெக்சிகோவில் கடந்த மாதம் சான் பர்தோலோ டி பெர்ரியாஸ் நகரில் மத வழிப்பாட்டு நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோவில் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் இராபுவாடோ நகரில் கிறிஸ்தவ மத நிகழ்வு ஒன்றில் மக்கள் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் வீதியில் நடனம் ஆடியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் துப்பாக்கி சூடு நடத்துவது தெரிந்ததும், சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து நாலாபுறமும் தப்பியோடினர். இதுபற்றிய காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலானது. இராபுவாடோ நகர அதிகாரி ரொடால்போ மெஜ் செர்வான்டிஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது. 20 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதுபற்றிய விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் குவானாஜுவாட்டோ மாகாணத்தின் சான் பர்தோலோ டி பெர்ரியாஸ் நகரில் சர்ச் சார்பில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.