முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka), உட்பட மூவருக்கு எதிரான வழக்கை ஜூலை 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ராஜகிரிய பகுதியில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து மற்றும் ஆதாரங்களை மறைத்ததாக சம்பிக்க ரணவக்க, வெலிக்கடை காவல் நிலையக பொறுப்பதிகாரியாக பணியாற்றிய உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சுதத் அஸ்மடல உட்பட மூவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
குறித்த வழக்கை இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், ”2016 பெப்ரவரி 28, அன்று விபத்து நடந்த நேரத்தில், வாகனத்தின் ஓட்டுநர் திலும் துசித குமார என்பதைக் குறிக்கும் வகையில் பொய்யான ஆதாரங்களை உருவாக்க சதி செய்ததாகவும், சம்பிக்க ரணவக்கவை சட்டப்பூர்வ தண்டனையிலிருந்து பாதுகாக்க ஆதாரங்களை அழிக்க சதி செய்ததாகவும் மூன்று பிரதிவாதிகள் மீதும் சட்டமா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பிக்க ரணவக்கவை சட்டப்பூர்வ தண்டனையிலிருந்து பாதுகாப்பதற்காக, நீதவான் நீதிமன்றத்தில் தவறான அறிக்கையை சமர்ப்பித்ததற்காக, வெலிக்கடை காவல் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சுதத் அஸ்மடல மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஜீப் வாகனத்தை ஓட்டிச் சென்றதை அறிந்து, தான் அந்த வாகனத்தின் ஓட்டுநர் என்று நீதவான் நீதிமன்றத்தில் பொய்யாகக் கூறியதற்காக, பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியாகச் செயல்பட்ட திலும் துசித குமார மீது சட்டமா அதிபர் தனி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மூவருக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கு, இன்று (30) விசாரணைக்கு வந்தபோது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.
வழக்கு அழைக்கப்பட்ட போது, பிரதிவாதி பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, சாட்சியங்களை முன்வைத்தார்.
அத்துடன் சட்டமா அதிபர் வழக்கை தாக்கல் செய்த விதம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனு மீதான முடிவு இன்னும் கிடைக்கப் பெறாததால், வழக்கை ஒத்திவைக்குமாறு கோரினார்.
இந்த நிலையில், உண்மைகளை பரிசீலித்த நீதவான், வழக்கை ஜூலை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.