
பாடசாலை பாடத்திட்டத்தில் தேர்தல்கள் தொடர்பான படிப்பினைகளை சேர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பத்திரிகையாளர் சங்கமும் தேர்தல் ஆணைக்குழுவும் இணைந்து நேற்று (29) ஏற்பாடு செய்திருந்த சிறப்பு கருத்தரங்கில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில் அரசியல் எழுத்தறிவு மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் அதன் தாக்கம்” என்ற தலைப்பில் குறித்த கருத்தரங்கானது இடம்பெற்றுள்ளது.
அதன்போது, எட்டாம் தர பாடசாலை பாட திட்டத்தில் தேர்தல்கள் தொடர்பான படிப்பினைகளை சேர்ப்பது குறித்து கல்வி அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.
நாட்டில் அரசியல் எழுத்தறிவு மிகக் குறைவாக இருப்பதால், முறையான கல்வியில் அது குறித்த அறிவை வழங்குவது கட்டாயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.