சிரஞ்சீவியின் ஆண் வாரிசு கருத்து சமூக ஊடகங்களில் கண்டனங்கள்

தனது வீட்டில் பெண்களே இருப்பதால், மகளிர் விடுதி வார்டன் போல தான் இருப்பதாக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். அதேநேரம், தனது பரம்பரை தொடர, ஆண் வாரிசை மகன் ராம் சரண் பெற்றெடுக்க வேண்டும் என்று பேசியதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டாரான சிரஞ்சீவியின் இந்தக் கருத்து தற்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் சிரஞ்சீவி. தனது காலத்தில் அதிக வசூல் படைத்த 8 திரைப்படங்களில் நடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 1992-ஆம் ஆண்டில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றதன்மூலம், அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலேயே ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவர்.

1980-ஆம் ஆண்டில் தெலுங்கு நகைச்சுவை நடிகர் அல்லு ராமலிங்கையாவின் மகள் சுரேகா-வை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியின் மகன்தான் பிரபல நடிகர் ராம் சரண். மேலும், சுஷ்மிதா, ஸ்ரீஜா என்ற இரு மகள்களும் உள்ளனர். உபாசனா-வை ராம் சரண் திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதேபோல, சிரஞ்சீவியின் மகள்களான சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகியோருக்கு தலா இரண்டு மகள்கள் உள்ளனர்.