சட்டவிரோத மின் பாவனையால் பரி போன உயிர்

மட்டக்களப்பு – வாழைச்சேனை, பண்ணை ஒன்றில், யானைக்கு வைக்கப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம், இன்றையதினம் (13-02-2024) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பண்ணையில் அனுமதியின்றி மின்கம்பிகள் பதித்ததால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் கிரான், புலி பாய்ந்த கல் பிரதேசத்தை சேர்ந்த 51 வயது நபரும், 21 வயது இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.

53 ஏக்கரில் அமைந்துள்ள குறித்த பண்ணையில், வேலை செய்யும் 54 வயது மதிக்கத்தக்க ஒருவரும் சென்றவருடம் மின் விபத்தில் சிக்கி பண்ணையில் உயிரிழந்தார்.

சட்டவிரோத மின் பாவனையாலேயே குறித்த மரணம் சம்பவித்திருந்ததாக கூறப்படுகின்றது.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் தற்சமயம் குறித்த பண்ணையில் வேலை செய்யும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பண்ணையின் மின் வேலிக்கான மின்சாரம் பிரதான மின் கட்டமைப்பினுடாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை குறித்த பண்ணையில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில் இது தொடர்பில் பொலிஸார் உரிய சட்டநடவடிக்கையை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.