நடு வானில் விமானத்தின் கதைவை திறக்க முயன்ற பயணி!

இங்கிலாந்திலிருந்து கனடா நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லண்டனிலிருந்து ரொரன்றோ நோக்கி ஏர் கனடா விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. விமானம் அட்லாண்டிக் பெருங்கடல் மீது பறந்துகொண்டிருந்தபோது, திடீரென எழுந்த ஒரு பயணி விமானத்தின் அவசர வழிக் கதவைத் திறக்க முயன்றுள்ளார்.

உடனடியாக விமானப் பணியாளர்கள் அவரைப் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

மனக்குழப்பத்தில் இருந்த அந்த முதியவர், வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை என்றே தோன்றுவதாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன், அவர் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

ஏற்கனவே, இரண்டு வாரங்களுக்கு முன், ஏர் கனடா விமானம் ஒன்றில் ஏறிய பயணி ஒருவர், இருக்கையில் அமர்வதற்கு பதிலாக, விமானத்தின் கதவைத் திறந்துகொண்டு கீழே குதித்தார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அப்போது, அந்த விமானம் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது.

விடயம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் விமானம் பறக்கும்போது, அதன் கதவைத் திறக்கமுடியாது. விமானத்தின் உள்ளே உள்ள அழுத்தம் மற்றும் வெளியில் உள்ள அழுத்தத்திற்கிடையே உள்ள வித்தியாசம் காரணமாக, விமானத்தின் கதவு திறக்கமுடியாத வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள் விமான நிறுவன ஊழியர்கள்.