பிரதமரை விமர்சிக்கும் தகுதி எவருக்கும் இல்லை

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் தகுதி முதல்வர் முக ஸ்டாலினுக்கு இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை அறிக்கை
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பயிற்சிப் பாசறையில், யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டைப் பார்த்து, அதில் இருப்பதை ஒப்பித்துவிட்டுப் போயிருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின் என விமர்சனம் செய்துள்ளார்.

1964 ஆம் ஆண்டு புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடியை சீரமைக்க, பிரதமர் தான் முதன்முதலாக முயற்சி எடுக்கிறார் என்பதைத் ஸ்டாலின் ஒப்புக் கொள்கிறார் என சுட்டிக்காட்டிய அண்ணாமலை, தமிழக மீனவர்கள் மீது அக்கறை உள்ளது போல முதல்வர் நடிப்பதை மக்கள் நம்பும் காலம் மாறிப்போய்விட்டது என பதிவிட்டுள்ளார்.

வெட்கமாக இல்லையா?
தனுஷ்கோடிக்கு, பிரதமர் மோடி ஆட்சியில்தான் மின்சார வசதி வந்தது என்பதை குறிப்பிட்டு, ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பிரதமர் மோடி தான் என அண்ணாமலை தனது அறிக்கையில் பகிர்ந்துள்ளார்.

1967 ஆம் ஆண்டிலிருந்து ஆறு முறை தமிழகத்தில் ஆட்சியிலிருந்தும், மத்திய அரசில் பல முறை அமைச்சர் பதவி வகித்தும், தனுஷ்கோடிக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் திமுகவால் செய்து கொடுக்க முடியவில்லை என்பது வெட்கமாக இல்லையா ஸ்டாலின்? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, பாஜக ஆட்சியில் மீனவர்களுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.

தகுதியே இல்லை
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா? என வினவிய அண்ணாமலை, ஆனால், பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற பிரதமர் திமுககாரர் அல்ல என்றும், பிரதமரை விமர்சிக்க முதல்வர் முக ஸ்டாலினுக்கு தகுதியில்லை என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.