தலைச்சுற்றல் வருவது ஏன்?

தலைச்சுற்றலை கிறக்கம், சுற்றுதல், சுழலுதல் என்றும் கூறுகிறார்கள். இந்த நோய் எல்லா வயதினரிடமும் காணப்படுகிறது. பெண்களுக்கு இந்த பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது. சிலருக்கு திடீர் அசைவுகள் மூலம் தலைச்சுற்றல் ஏற்படலாம். உள்காது நரம்பியல் பிரச்சினைகளாலும், வலிப்பு நோயாலும், அதிகமாக மது குடிப்பதாலும் இது வரலாம்.

கடுமையான ஜலதோஷத்தில் இருந்து விடுபட்டவருக்கு, இந்தத் தலைச்சுற்றல் வரும் வாய்ப்பு உண்டு. உட்கொள்ளப்படும் சில மருந்துகள், தலையில் அடிபடுதல், பயணம் போன்றவையும் இதற்கு காரணமாகின்றன. தள்ளாட்டம், வாந்தி எடுக்கும் உணர்வு, செவித்திறன் குறைவு, காதில் அடைப்பு, வலி போன்றவையும் காணப்படலாம். சிலருக்கு முகத்திலும் பலவீனம் தெரியும்.

நிற்க இயலாமை, கீழே விழுதல், நடப்பதில் தள்ளாட்டம் போன்றவை முக்கிய அறிகுறிகள். ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தையும் இது பாதிக்கும். பார்வை மங்குதல், பேச்சில் தடுமாற்றம், காது கேளாமை போன்றவையும் வரலாம். சிலருக்குச் சில விநாடிகள், சில நிமிடங்களே இந்தப் பிரச்சினைகள் காணப்படும். உள்காது பிரச்சினை உள்ளவர்கள் பயணம் செய்தால் தலைச்சுற்றல், வாந்தி வந்துவிடும். செவித்திறன் பரிசோதனைகள், பேச்சாற்றலைக் கண்டுபிடித்தல் போன்ற பரிசோதனைகள் எல்லாம் இதற்கு வந்துள்ளன. சிலருக்குத் தலைச்சுற்றும்போது, கால்சியம் கார்பனேட்டின் அழுக்குகள் உடைந்து காதில் படிகிறது. பித்த ஆதிக்கத்தினால் உண்டாகும் தலைச்சுற்றலால், வாயில் புளிப்பு அல்லது கசப்பு, புளித்த ஏப்பம், வயிற்று உப்புசம் ஏற்படலாம்.

கண்கள், உள்ளங்கை, கால்களில் எரிச்சல் இருக்கும். தூக்கம் சரியாக வராது. இந்த வகை தலைச்சுற்றலுக்கு, மிளகு அல்லது வெந்தயத்தைப் பாலில் அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். இஞ்சியைத் தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கி, சட்டியில் இட்டு வதக்க வேண்டு்ம். நன்கு வதங்கியபின், அதனுடன் கொஞ்சம் தேனைச் சேர்த்து மேலும் வதக்கி, கொஞ்சம் நீரையும் சேர்த்து, சிறிது காய்ந்தவுடன் இறக்கி வடிகட்டி, வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினமும் 2-லிருந்து 3 வேளை குடித்துவந்தால் தலைச்சுற்றல் குறையும். அஜீரணத்தால் வரும் தலைச்சுற்றலுக்கு சுக்கு, மல்லி விதை, சீரகம் போட்டுக் காய்ச்சிய சுடுநீரைக் குடிப்பது நல்லது.