வயிற்று புண் மற்றும் குடல் புண்ணை தீர்க்கும் சித்த மருத்துவம்

வயிற்றுப்புண் குணமடைய நேரம் தவறாமல் உணவு சாப்பிடுங்கள். காரமான, புளிப்பான உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். இரவு நெடுநேரம் கண்விழித்து டி.வி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும், மனச்சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். சுகாதாரமான உணவுகளை சாப்பிட வேண்டும், சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஹெச்.பைலோரை பாக்டீரியா தொற்றினாலும் குடல் புண் வரும்.

இதற்கான சித்த மருந்துகள்: வில்வாதி லேகியம், சீரக வில்வாதி லேகியம் இவைகளில் ஒன்றை காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடுங்கள். அடுத்து, ஏலாதி சூரணம் ஒரு கிராம், சங்கு பற்பம் 200 மி.கி. எடுத்து மூன்று வேளை, நெய்யுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

மேலும், குன்ம குடோரி மெழுகு கால் டீ ஸ்பூன் (250 மி.கி) காலை, இரவு உணவுக்குப் பின்பு சாப்பிடுங்கள். உணவில் மோர், தயிர், பிரண்டைத் தண்டு துவையல், மணத்தக்காளி கீரை, சுண்டை வற்றல் குழம்பு மற்றும் பழைய சாதத்துடன் சின்ன வெங்காயம், இஞ்சி, மோர் கலந்து சாப்பிடுங்கள். பழங்களில் மாதுளம்பழம், செவ்வாழைப்பழம், ஆப்பிள் சாப்பிடுங்கள்.