சூடான பாப்கார்ன் உடல் எடையை அதிகரிக்குமா?

சாதாரண ஒரு கோப்பை பொரித்த மக்காச்சோளத்தில் (பாப்கார்ன் ) 31 கலோரி ஆற்றலே இருக்கும். இதே அளவுள்ள கோப்பையில் உருளை சிப்ஸ் சாப்பிட்டால் 139 கலோரி ஆற்றல் இருக்கும். எனவே மக்காச்சோளம் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமோ? என்ற கவலையே இல்லாமல் சாப்பிடலாம். ‘பாப்கார்ன்’ சாப்பிட, பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வித்தியாசம் தேவையில்லை.

எல்லா வயதினருமே விரும்பி சாப்பிடும் பாப்கார்ன் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா..? மக்காச்சோளம்தான் பாப்கார்னாக மாறுகிறது. இந்த மக்காச்சோளம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்று. குறைந்த கலோரிகள் கொண்டது என்பதால் நொறுக்குத் தீனியாக நிறைய சாப்பிடலாம். பாப்கார்ன் தயாரிக்க பயன்படும் மக்காச்சோளம் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுத்தாத உணவுப் பண்டமாகும். பால், முட்டை, வேர்க்கடலை போன்ற உணவுப் பொருட்கள் ஒவ்வாமை கொண்டவர்கள்கூட மக்காச்சோளம் சாப்பிடலாம். பொரித்து, அவித்து, வறுத்து மக்காச்சோளம் சாப்பிடப்படுகிறது. மாவாக்கி, பண்டங்களாக தயாரித்தும் உண்ணப்படுகிறது.

பலவிதமான மணம், சுவை, கூட்டுப்பொருட்களுடன் மக்காச்சோள திண்பண்டங்கள் கிடைக்கின்றன. மக்காச்சோளம் முழுவதும் நார்ச்சத்தும், நோய் எதிர்ப்பொருட்களும் கொண்டது. காய்கறி, பழங்களைவிட சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்கள் மக்காச்சோளத்தில் இருக்கின்றன. சராசரி எடைகொண்ட மக்காச்சோளத்தில் நூற்றுக்கணக்கான முத்துகள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொரிக்கப்படாத நிலையிலேயே ஒரு கோப்பை நிறைய இருக்கும். 2 மேஜை கரண்டி அளவுள்ள மக்காச்சோள முத்துகளை பொரித்தால் ஒரு லிட்டர் அளவுள்ள பாப்கார்ன் கிடைக்கும்.

உலக நாடுகளை ஒப்பிடும்போது, அமெரிக்காவில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. கூடவே அமெரிக்கா வில்தான், அதிகளவிலான ‘பாப்கார்ன்’ சுவைக்கப்படுகின்றன. அங்கு, பாப்கார்ன்களுக்கான பிரத்யேக அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவில் பல வண்ணத்தில் விளைந்த பாரம்பரிய மக்காச்சோள விதைகளை கலப்பு செய்து, ‘ரெயின்போ கார்ன்’ என்ற பெயரில் வண்ணமயமான மக்காச்சோளம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது அங்கு வண்ணமயமான மக்காச்சோளத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை கிளாஸ் ஜெம் கார்ன் என்றும் அழைக்கிறார்கள். சரியாக சாப்பிட மறுக்கும் குழந்தைகளின் பசி போக்கவும், நார்ச்சத்து தேவையை ஈடுகட்டவும் மக்காச்சோளம் உதவும். ஆரோக்கியமான மக்காச்சோளத்தை ருசித்து நலம் பெறுவோம். * பாப்கார்ன் எப்படி வெடிக்கிறது? மக்காச்சோள முத்துகளில் சிறிதளவு நீர்ச்சத்து இருக்கும்.

இதை பொரிக்கும்போது, வெப்பத்தால் அதில் உள்ள நீர் ஆவியாகி வெளியேறுவதால்தான் மக்காச்சோளம் வெடித்துச் சிதறி பாப்கார்ன் பொரியா கிறது. 347 டிகிரி வெப்பத்தில் மக்காச்சோளம் பொரியாக மாறும். மக்காச்சோளம் பொரிபடும்போது 3 அடி உயரம் வரை வெடித்து குதிக்கும். அதனால்தான் கூண்டுவடிவ கலனில் மக்காச்சோளம் பொரித்து எடுக்கப்படுகிறது. பொரிக்கும்போது குதித்து வெடிப்பதால்தான் அதற்கு ‘பாப்கார்ன்’ என்ற பெயர் ஏற்பட்டது.