ஐயப்ப சாமிகளுக்கான 31 வழிபாடு விதிமுறைகள்

1.  ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19-ந் தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னிதானத்திற்குச் செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும் படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும்.

2 .துளசிமணி அல்லது உருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது.

3.  பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும், அல்லது தாய், தந்தையர் மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலையினையோ அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்து கொண்டவுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சிணையைக் கொடுத்து அடி வணங்கி ஆசிபெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நிமிடத்திலிருந்து குருசாமியை முழுமனதுடன் ஏற்று அவர்தம் மொழிகளை தேவ வாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்துக்கொண்டு பயணத்தை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

4.நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் இயலாவிட்டாலும் பஜனைகளில் கலந்து கொள்ளும்போதும், யாத்திரையின்போது முழுவதும் கண்டிப்பாக வர்ண உடை அணிய வேண்டியது அவசியம்.

5.மலைக்குச் செல்லக் கருதி, மாலை அணிய விரும்பும் பக்தரை, தாய், தந்தை, மனைவி, மக்கள் முதலியோர் தடுத்தல் கூடாது. எவ்வித அச்சமுமில்லாமல் தர்மசாஸ்தாவிடம் முழுப் பொறுப்பினையும் வைத்து, முகமலர்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

6.மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சாரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும்.

7.காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனைகளில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.

8.படுக்கை, தலையணைகளை நீக்கி, தன் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்கவேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும்.

9.களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப்பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.

10.எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றைக் தவிர்க்கவேண்டும்.

11.மற்றவர்களிடம் பேசும் பொழுது, “சாமி சரணம்”எனத் தொடங்கி, பின் விடை பெறும்பொழுதும் “சாமிசரணம்” எனச் சொல்ல வேண்டும்.

12.விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.

13.பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை ஐயப்பா என்றும், பெண்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்கவேண்டும்.

14. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக பயணம் வர விரும்புகிறவர்களிடம் “நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன். என்னோடு தைரியமாக வரலாம்” என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும் பொழுது போய் வருகிறேன். என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பத்தியுணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும்.

15.மாலையணிந்த ஐயப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்யவேண்டும்.

16.மாலையணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.

17.யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா ஐயப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் ஐயப்பன் பக்தர்கள் வீட்டிலோ, பொது இடங்களிலோ சற்று விரிவான முறையில் கூட்டு வழிபாடு (பஜனை) நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி அருள் பெறுவது சாலச் சிறந்தது. ஐயப்பமார் ஒருவருக் காவது அன்னமிடுதல் மிக்க அருள்பாலிக்கும்.

18.மரணம் போன்ற துக்க காரியங்கள் எதிலும் ஐயப்பமார்களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துக் கொள்ளக் கூடாது. தவிர்க்க முடியாத நெருங்கிய உறவில், மரணம் நேரிட்டு கலந்து கொள்ள வேண்டிய திருந்தால் தான் அணிந்த மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகு தான் கலந்துகொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. ஐயப்பன் திருவருளை வேண்டி மறுவருடம் சென்று வரவேண்டும்.

19.எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமானதாகும். எனவே எந்தப் பெண்களைக் கண்டாலும் தாயென்றே கருத வேண்டும். மாதவிலக்கான பெண்களை காணக்கூடாது. தவறுதலாகக் காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வழிபட வேண்டும். பெண்கள் ருதுமங்கள சடங்கு விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது.

20.இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டிலோ, இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து ஐயப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணம் தொடர வேண்டும். யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக் கூடாது.

21. கன்னி ஐயப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்திலிருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது. குருநாதர் அல்லது மற்ற பழமலை ஐயப்பன்மாரைக் கொண்டு ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.

22.12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற வயதான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.

23.யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் விளித்தல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.

24.பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக்கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.

25.பம்பையில் சக்தி பூஜையின்போது ஐயப்பமார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப்பெறுவதுதான் சபரிமலை பஸ்பம், இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

26.இருமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் இந்த நெய்யை யும், விபூதி பிர சாதங்களையும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

27.ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத் தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக் கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.

28.குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண்டிய சமயங்களிலெல்லாம் ஐயப்பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக்கேற்றவாறு கொடுத்து குருவின் அருளைப் பெறலாம். இதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. ஐயப்பமார்கள் கொடுக்கும் காணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அதை மன மகிழ்வுடன் பெரும்பொருளாக ஏற்று குருவின் குருவான ஐயப்பனுக்கே செலுத்தி பேரருள் பெற்றுய்வது குருமார்களுக்குச் சாலச் சிறந்ததாகும்.

29.ஐயப்பன்மார்கள் எல்லோரும், குறிப்பாக கன்னி ஐயப்பன்மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன் விளைவிக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில், கடமை சூழ்நிலை கருதி எரிமேலியிலிருந்து சாலைக்காயம் வழியாகவும், சிலர் வண்டிப்பெரியாறு வழியாகவும் சபரிமலை செல்கிறார்கள். என்றாலும் பெரிய பாதையில் செல்லும் பொழுது மலைகளில் விளையும் பல மூலிகைகளின் சக்தி கலந்த காற்றினை பெறுவதாலும், பல மூலிகைகளை கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல்நலம் ஏற்படுவதாலும் எழில்மிக்க இயற்கைக்காட்சிகளைக் கண்டு களிப்பதால் உள்ளம் பூரிப்பதாலும், பேரின்பமும் பெருநலமும் அடைகிறோம். நீண்டவழிப்பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து பக்தி உணர்ச்சி வளர்கிறது.

30.யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி, வாயிற்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆர்த்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும்.

31.யாத்திரை இனிதே நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப்படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்.