தூங்கும் முறைகளால் ஏற்ப்படும் பாதிப்புகள்

உடலும், மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு தூக்கம் அடிப்படையானது. இரவில் போதுமான தூக்கம் இல்லையென்றால் அடுத்த நாள் உங்களின் அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படும். சீரான தூக்கம் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பராமரிப்பது முதல் பல நன்மைகளை உண்டாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தூங்கும்போது, குப்புறப்படுத்தல், மல்லாந்துப் படுத்தல், ஒருக்களித்துப் படுத்தல் என்ற மூன்று முறைகளில் தூங்குபவர்களே அதிகம். இது தவிர, குழந்தை போல உடலைச் சுருக்கிக் கொள்வது, ஒரு புறம் சாய்ந்து அருகில் இருப்பவர்கள் அல்லது தலையணையை அணைத்துக்கொள்வது, கால்களுக்கு மட்டும் தலையணை வைத்துப் படுப்பது, மல்லாந்து படுத்துக் கொண்டு கை, கால்களை அகற்றி வைத்தவாறு தூங்குவது, நாற்காலியில் அமர்ந்தவாறு மேசையில் சாய்ந்து தூங்குவது, கட்டில் அல்லது சோபாவில் ஒரு காலை மட்டும் கீழே தொங்கவிட்டபடி தூங்குவது என பல விதங்களிலும் தூங்குகிறோம்.

எத்தகைய நிலையில் தூங்குகிறோம் என்பதும், உடல் நலத்தில் பாதிப்புகளை உண்டாக்கும். தூக்கத்தின்போது உடல் உறுப்புக்கள் தன்னைத் தானே சீர்படுத்திக்கொள்ளும். தூங்கும் முறை முதுகுத் தண்டு மற்றும் முக்கிய உறுப்புகளில் எவ்வித தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதைப் பொறுத்து, நன்மை-தீமைகள் ஏற்படலாம். இரவில் தூங்கி காலையில் எழுந்திருக்கும்போது சிலருக்கு அதிக உடல் வலி இருக்கும். தூங்கும் முறை சரியில்லாததே இதற்கு காரணம். குப்புறப்படுத்து தூங்கும்போது வயிற்றுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு செரிமானக் கோளாறுகள் உண்டாகும்.

அதேபோல் மல்லாந்து கை, கால்களை அகற்றி வைத்த நிலையில் படுப்பதால், உடலுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இது குறட்டையை உண்டாக்கும். உட்கார்ந்தபடி தூங்குவது, உடலைச் சுருக்கிக் கொண்டு தூங்குவது, கை, கால்களை தொங்கவிட்ட நிலையில் தூங்குவது உடலின் சீரான ரத்த ஓட்டத்தை தடைப்படுத்தும். இதனால், உடலில் குறிப்பிட்ட பகுதியில் வலி, உணர்வின்மை உண்டாகும். வலது பக்கமாக சாய்ந்து படுக்கும்போது சுவாசத்தின் அளவு குறையும்.

ஆகையால், உடல் எளிதில் குளிர்ச்சி அடைந்துவிடும். இரைப்பையில் உள்ள உணவு செரிக்காமல், வயிற்று உப்புசம் மற்றும் வாயுத் தொல்லை அதிகரிக்கும். சரியான உறங்கும் முறை: இடது கை கீழாகவும், வலது கை மேலாகவும் இருக்கும்படி, இடது புறம் ஒருக்களித்தபடி, கால்களை நீட்டி படுக்கலாம். அல்லது தலையணையில் சரியாக தலையை வைத்து மல்லாந்து கால்களை ஒட்டியபடி நீட்டியும், கைகளை உடல் மேல் வைத்தும் படுக்கலாம். இம்முறையில் தூங்கும்போது உடல் முழுவதும் சீராக ரத்த ஓட்டம் பாயும். உடலுக்குத் தேவையான பிராண வாயு கிடைத்து உணவு எளிதில் செரிக்கும். கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் மருத்துவரின் ஆலோசனை படி தூங்கும் முறைகளை பின்பற்றுவது அவசியம்.