தேசிய பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி ஆரம்பம்

இந்திய பாய்மரப் படகுச் சங்கம் சார்பில் நடப்பாண்டிற்கான தேசிய சீனியர் பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டிகள் மும்பை துறைமுகத்தில் இன்று தொடங்கின. வரும் 20ந் தேதி வரை நடைபெறும் இந்த படகு போட்டிளில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள 15 பாய்மர படகோட்டி கிளப்களை சேர்ந்த 115 க்கும் மேற்பட்ட மாலுமிகள் பதிவு செய்துள்ளனர்.

ஒரு சுற்றுக்கு 12 பந்தயங்கள் என மொத்தம் எட்டு சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு வகை என மூன்று வகைகளாக நடத்தப்படும் இந்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் சீனாவில் நடைபெற உள்ள அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுகின்றனர். ஓமன், கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்பட சர்வதேச பந்தய அதிகாரிகள் குழு, இந்த போட்டிகளை ஆய்வு செய்கிறது.