அரச செலவுகள் அதிகரிப்பு!

நாடாளுமன்றத்தில் நாளைய தினம் தாக்கல் செய்யப்பட உள்ள வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச செலவுகள் 2022 ஆம் ஆண்டை விட 29.2 வீதமாக அதிகரித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசின் மொத்த செலவு 7885 பில்லியன் ரூபா

2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் செலவுகள் 7 ஆயிரத்து 885 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் அந்த செலவுகள் 2022 ஆம் ஆண்டில் 6 ஆயிரத்து 100 பில்லியன் ரூபாவாக இருந்தது.

நாட்டிற்குள் பாரிய பொருளாதார நெருக்கடி காணப்படும் நிலைமையில் கூட பாரிய இலக்கு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. மதிப்பீட்டு சட்ட மூலம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பாதுகாப்பு செலவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முறை அது குறைக்கப்பட்டுள்ளது.இம்முறை பாதுகாப்பு செலவுகளின் கீழ் சமூக பாதுகாப்புக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செலவு 410 பில்லியன்

572 பில்லியன் ரூபா அதுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கல்விக்காக 504 பில்லியன் ரூபாவும் சுகாதாரத்திற்காக 432 பில்லியன் ரூபாவும் பாதுகாப்புக்காக 410 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அடுத்தாண்டுக்கான அரசின் செலவுகள் என எதிர்பார்க்கப்படும்( நிவாரணங்கள், சம்பளம்)செலவுகளுக்காக 2 ஆயிரத்து 442 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலீடுகளுக்காக (நிர்மாணத்துறை) ஆயிரத்து 225 பிலலியன் ரூபாவும் கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்காக 4 ஆயிரத்து 218 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.