பிரான்சில் அமுலாகியுள்ள புதிய சட்டம்

பிரான்ஸில் குடும்பப் பெயரை மாற்றுவதற்கான சட்டம் அமுலுக்கு வந்துள்ளமையினால், உறவினரின் பெயரை ஏற்றுக்கொள்வது அல்லது நீக்குவது தற்போது மேலும் எளிதாகியுள்ளது.

நீதி அமைச்சர் எரிக் டுபாண்ட்-மோரெட்டி(Éric Dupond-Moretti)யினால் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நகர மண்டபத்தில் நேரில் வந்து மேற்கொள்ளப்படும் ஒரு எளிய சந்திப்பு மூலம் இந்த செயல்முறையை செயற்படுத்த முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

அமுலுக்கு வந்துள்ள இந்த சட்டம் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜுலை மாதத்தின் தொடக்கத்தில் இந்த செயல்முறையை எளிதாக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுவரையில் 4,000 க்கும் மேற்பட்டோரின் குடும்பப் பெயரை மாற்றுவதற்கான கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன நேற்றைய தினம் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய சட்டம், எந்த வயது வந்த நபரும் தாங்கள் தாங்க விரும்பும் பெற்றோரின் பெயரை சுதந்திரமாக முடிவு செய்ய அல்லது ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் ஆவணங்களில் தங்களின் விருப்பமான பெயரைச் சேர்க்க அனுமதிக்கிறது.

ஒரு தம்பதி பிரிந்து வாழ்ந்தால் பிள்ளை யாருடைய கைகளில் வளர்கிறதோ அவர்களின் பெயர்களை இணைத்துகொள்வதற்கு இந்த வாய்ப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளதென கூறப்படுகின்றது.

திட்டவட்டமாக, எந்தவொரு விண்ணப்பதாரரும் இப்போது தனது தந்தை, தாய் அல்லது இருவரின் பெயரையும் தங்கள் பெயரில் சேர்த்துக் கொள்ள அனுமதி கோரலாம். இல்லை என்றால் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பெயரை இந்த சட்டத்திற்கமைய மாற்றிக் கொள்வதற்கான அனுமதியும் இதன் ஊடாக வழங்கப்படுகின்றது.

அனைத்தும் இலவச மற்றும் எளிதாக்கப்பட்ட இந்த செயல்முறை தற்போது மேலும் இலகுவாக்கப்பட்டுள்ளது. நகர மண்டபத்திற்கு சென்று எளிமையான சந்திப்பின் மூலம் இதனை மாற்றிக் கொள்ள முடியும்.

முன்னர் விண்ணப்பித்து விட்டு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்பட்ட போதிலும் தற்போது இலகுவாக்கப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.