ரஷ்ய தாய்மார்கள் அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கும் பாதிரியார்

உக்ரைன் போர் தொடர்பில் ஆண்கள் கட்டாயப்படுத்தப்படும் நிலையில், ரஷ்ய தாய்மார்கள் அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாதிரியார் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆர்த்தடாக்ஸ் பேராயரான 51 வயது மிகைல் வாசிலியேவ் என்பவரே, போர் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், பெண்கள் அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்ள தயாராக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு பெண்களும் அதிக பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் வகையில் கடவுள் ஆசீர்வதித்துள்ளதாகவும், அதை புறக்கணிக்க வேண்டாம் எனவும் பாதிரியார் வாசிலியேவ் தெரிவித்துள்ளார்.

பாதிரியார் வாசிலியேவ்வின் இந்த பரப்புரை கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. போருக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதிக பிள்ளைகள் இருந்தால், தங்கள் மகன்களை போருக்கு அனுப்பும் தாயார் கவலை கொள்ள தேவையிருக்காது எனவும் அவர் கூறியிருந்தார். ரஷ்ய ஆயுதப்படைகளுடன் பயணிக்கும் பாதிரியார் வாசிலியேவ், சமீபத்தில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது