சிறுநீரக பிரச்சினையில் இருந்து காத்துக்கொள்ளும் வழி முறைகள்

உடல் உறுப்புகளின் செயல்பாட்டையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நிர்வகிப்பதில் சிறுநீரகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ரத்த ஓட்டத்தில் கலந்திருக்கும் கழிவுகள், அதிகப்படியான நீர், உடலில் சேரும் நச்சுகள் உள்ளிட்டவற்றை வெளியேற்றுவது சிறுநீகரத்தின் முக்கியமான பணியாகும். இந்த கழிவு பொருட்கள் சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன.

உடலில் பி.எச் அளவு, உப்பு, பொட்டாசியம் போன்றவற்றின் அளவை சம நிலையில் வைத்திருக்க சிறுநீரகங்கள் உதவுகின்றன. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும், ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும் துணைபுரிகின்றன. ஆகையால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பேணுவது அவசியமானது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு உதவும் பயனுள்ள விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

1. திரவ உணவை உண்ணுங்கள்: தினமும் எந்த அளவுக்கு திரவ உணவுகளை உட்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு சிறுநீரகங்கள் நன்றாக செயல்படும். தண்ணீர் மட்டுமல்ல, இளநீர், பழ ஜூஸ் போன்ற ஊட்டச்சத்து பானங்களை பருகுவதும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீரைக் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான சோடியம் மற்றும் நச்சுகளை வெளியேற்றும்.

2. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்: தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். சிறுநீரக நோய் ஏற்படுவதையும் தவிர்க்கும். ரத்த அழுத்த அளவை குறைக்கவும் வித்திடும். நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம் கூட சிறுநீரகங்களுக்கு சிறந்தது. எனவே தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்றுங்கள்.

3. புகைப்பழக்கம் மற்றும்  மதுப் பழக்கத்தை தவிருங்கள்: புகைப்பிடிப்பது ரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதனால் சிறுநீரகங்கள் உட்பட உடலின் முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் வீரியம் குறைந்துவிடும். சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். அதுபோல் மதுப்பழக்கமும் சிறுநீரகங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலிருக்கும் ஆல்கஹால் நீரிழப்பை ஏற்படுத்தும். அதனால் சிறுநீரகங்களின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகும். இறுதியில் உடல் பருமன், கல்லீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட நேரிடும்.

4. ஆரோக்கியமான உணவை  உண்ணுங்கள்: அன்றாட உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும் சிறுநீரகங்களுக்கு நன்மை பயக்கும். உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ளாமல் சீராக உடல் எடையை பராமரிப்பது சிறுநீரக நோய் அபாயத்தை குறைக்க உதவும். பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்வது சிறுநீரகங்களின் ஆரோக்கியம் காக்க துணைபுரியும்.

5. உப்பின் அளவை குறையுங்கள்: உண்ணும் உணவில் உப்பின் அளவை குறைப்பது சிறுநீரகங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் உறுப்புகளுக்கும் ஆரோக்கியமானது. உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொள்வது சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கல் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யும். சிறு நீரில் உள்ள புரதத்தின் அளவு அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே சிறுநீரக நோய் இருந்தால் நிலைமை மோசமாகக்கூடும்.

6. பரிசோதனை மேற்கொள்ளுங்கள்: சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சிறந்த வழி, அடிக்கடி பரிசோதனை மேற்கொள்வதுதான். குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தால் ஆரம்ப நிலை யிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்துவிடலாம். ஏற்கனவே சிறுநீரக நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் தவறாமல் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்வதும் அவசியமானது.